Show all

கை, கால்கள், விலா எலும்புகள், தலைகள் உடைக்கப்படும்! திலீப் கோஷ்

மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்குள் திருந்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கை, கால்கள், விலா எலும்புகள், தலைகள் உடைக்கப்படும். என மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தெனவெட்டு காட்டியுள்ளார்.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை ஆளும் அதிமுக போல வங்காளத்தில் மாநில ஆட்சிக்கு மட்டும் முனையும் கட்சியாகும். ஆனால் தமிழகத்தில் ஒன்றிய பாஜக ஆட்சிக்கு அதிமுக கட்டுப்பட்டு இயங்குவது போல அடிமைத்தனத்தை விரும்புவதில்லை அக்கட்சி. செயலலிதா காலத்து அதிமுக போல துணிச்சலாக ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜகவை எதிர் கொள்கிறது அக்கட்சி.

தமிழகத்தில் பாஜகவை எதிர்க்கிறவர்களுக்கு பாஜக முன்னெடுக்கும் தலைப்பு தேசத்துரோகி என்பது. அங்கே வங்காளத்தில் பாஜக எதிர்க்கிறவர்களை நோக்கி முன்னெடுக்கும் தலைப்பு ஒழுங்கீனத்தில் ஈடுபடுகிறவர்கள் என்பதாகும். 

இந்த அடிப்படையில்:- ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்குள் திருந்திக்கொள்ள வேண்டும் என மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தெனவெட்டு காட்டியுள்ளார்.
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டமன்றம் தேர்தலை எதிர்கொள்ள இன்னும் 6 மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே கருத்துப் பரப்புதல் கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது.

இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தற்போதே தேர்தல் கருத்துப்பரப்புதல் நிகழ்ச்சிகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டது. 

பாஜகவின் இந்திய அளவிலான தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் மேற்குவங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், அம்மாநில பாஜக தலைவரான திலீப் கோசும் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் கோஷ் பேசுகையில், ‘மம்தா பானர்ஜியின் கட்சியினருக்கு (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்) நான் ஒன்றை கூறினேன். 

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவர்கள் அவர்களாகவே 6 மாதத்திற்குள் தங்கள் ஒழுங்கீன செயல்களை திருத்திக்கொள்ள வேண்டும். அல்லது அவர்களின் (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்) கை, கால்கள், விலா எலும்புகள், தலைகள் உடைக்கப்படும்.

நீங்கள் வீட்டிற்கு செல்லும் முன் மருத்துவமனைகு செல்ல வேண்டியிருக்கும். ஒரு வேளை அவர்கள் (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்) ஒழுங்கீன செயல்களை அதிகரித்தால் அவர்கள் கல்லறைக்கு அனுப்பப்படுவார்கள்’ என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.