இன்று:- தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி வங்காள தேசப் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டுள்ளார். சிலநாட்களுக்கு முன்பு:- இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை இடம் பெறச்செய்ய முயலவில்லை ஒன்றிய பாஜக அரசு. 13,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய மொழிகளில் தமிழுக்கும் வங்காளத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டு மொழியினங்களும் தங்கள் தங்கள் தாய்மொழியைக் கொண்டாடும் பாங்கு உடையவைகள். தமிழர்களும் வங்காளிகளும் இந்தியாவுக்கு பிரித்தானியர் கொடுத்துச் சென்ற விடுதலை அளிப்பின் போது பந்தாடப்பட்டவர்கள். தமிழர்கள் நிலஎல்லை அடிப்படையில் சிங்களவர்களுக்கும், வங்காளிகள் மதஅடிப்படையில் பாகிஸ்தானியருக்கும், இரண்டாம்தர குடிமக்களாக தள்ளிவிடப் பட்டவர்கள். இருவருமே விடுதலைக்காக போர்துறையை முன்னெடுத்தவர்கள். இருவருக்குமே இந்தியா உதவ வேண்டிய கடப்பாடு இருந்தது. காரணம் இரண்டு இனங்களுக்கும் மொழிஅடையாளத் தொடர்பு இந்தியாவில் இருந்தமைதாம். தமிழீழ மக்களும், இந்தியாவில் தென்புறத்தில் அமைந்த தமிழக மக்களும் தாய்மொழித் தமிழ் என்கிற ஒரே அடையாளத்தினர். கிழக்குப் பாகிஸ்தானியரும் இந்தியாவின் வடபுலத்தில் அமைந்த மேற்கு வங்காள மக்களும் தாய்மொழி வங்காளம் என்கிற ஒரே அடையாளத்தினர். இந்திய ஒன்றியத்தில் வடஇந்தியத் தலைவர்களின் ஆளுமையுள்ள நேற்றைய காங்கிரசுக்கும், இந்திய ஒன்றியத்தில் வடஇந்தியத் தலைவர்களின் ஆளுமையுள்ள இன்றைய பாஜகவுக்கும் மட்டும் தமிழர்களுக்கும் வங்காளிகளுக்குமான இந்த ஒன்றுமையை ஒப்புக் கொள்ள முடியவில்லை. இரண்டு கட்சிகளும் ஈழத்தமிழர் வீழ்ச்சிக்கு காரணமாகி இந்தியாவின் ஒரு கண்ணாகிய தமிழர்களுக்குச் சுண்ணாம்பும் இந்தியாவின் மறு கண்ணாகிய வங்காளிகளுக்கு வெண்ணெய்யும் வைத்து மாறுபாட்டையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து வங்காளதேச விடுதலைக்கு காங்கிரஸ் ஒத்துழைத்து, பேருதவி புரிந்து, விடுதலையைப் பெற்றே கொடுத்தது. ஆனால் சிங்களவர்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் போரட்டத்திற்கு ஒத்துழைக்காமல், சிங்களவர்களுக்கு படைஉதவி அளித்து தமிழீழ விடுதலைப் போரை முடித்து வைத்தது. இவையெல்லாம் கடந்த காலச் செய்திகள். இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஐந்து நாட்களுக்கு முன்பு- இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை இடம் பெறச்செய்ய முயலவில்லை ஒன்றிய பாஜக அரசு. இன்று இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, கொரோனா நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக வெளிநாட்டுப் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ளார். பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசம் விடுதலை பெற்ற வடஇந்தியத் தலைவர்களால் விடுதலைப்பெற்றுத் தரப்பட்ட 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் பயணம் அமையவிருக்கிறது. இதுதான், ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் என்று இந்திய மண்ணின் மக்கள் வங்காளியருக்கும், இந்திய மண்ணின் மக்கள் தமிழருக்கும் இடையே வட இந்தியத் தலைவர்கள் தொடர்கிற நிலைப்பாடு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.