Show all

இத்தாலியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு! இரண்டாம் உலகப் போரின், பீதியூட்டும் எச்சமாக. செயலிழக்கச் செய்யப்பட்டது

இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள பிரிண்டிஸி நகரில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குண்டால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எழுபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில், பிரிட்டிஷ் படைகளால் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிற வெடிக்காத குண்டு ஒன்று இத்தாலி பிரிண்டிஸி நகரில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. அந்த வெடிகுண்டில் 40 கிலோ அளவுக்கு டைனமைட் வெடிபொருள்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இந்தப் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றைச் சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்றது. அந்த பணியின் போதுதான் இந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அந்தக் குண்டை, இத்தாலி அதிகாரிகள் செயலிழக்கச் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இதற்காக 1,617 மீட்டர் சுற்றளவில் ரெட் ஜோனில் வசித்துவந்த சுமார் 54,000 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். 
நகரத்திலிருந்து மூன்றில் இரண்டு விழுக்காட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். விமான நிலையம், தொடர்வண்டி நிலையங்கள், இரண்டு மருத்துவமனைகள், சிறை வளாகம் அனைத்தும் மூடப்பட்டன. 217 சிறைக் கைதிகளும் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நகரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் 1,000 காவல்துறை அதிகாரிகளும், 250 தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். நகரத்துக்குள் யாரையும் நுழையவிடாமல் தடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

குண்டை செயலிழக்கும் பணியை மேற்கொண்டு வருவதால் எரிவாயு இணைப்புகள் நிறுத்தப்பட்டன. விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் ராணுவத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்தப் பணியை மேற்கொள்ள சுமார் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. வீரர்கள், வெற்றிகரமாக குண்டை செயலிழக்கச் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராணுவ வீரர்கள் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அந்தக் குண்டை அப்புறப்படுத்தியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,368.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.