தமிழகத்தின், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மனு பதிகை செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் வேட்புமனு பதிகை செய்து உள்ளனர். 01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற மார்கழி12 வெள்ளிக்கிழமை மற்றும் மார்கழி16 திங்கட் கிழமை (திசம்பர்27 மற்றும் 30) ஆகிய நாட்களாக 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. அதன்படி, 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வட்டார உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வட்டார உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வட்டார உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த கார்த்திகை23 திங்கட் கிழமை (திசம்பர்9) முதல் தொடங்கியது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்புமனு பதிகை செய்து உள்ளனர். நாம் தமிழர்கட்சி, அமமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் உள்ளாட்சி வட்டார இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக, தமாகா, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளுக்கு கிட்டத்தட்ட இடங்களை பகிர்ந்து அளித்து விட்டது. கலந்துரையாடல் மாவட்ட அளவிலேயே நடக்கிறது. இடங்களை ஒதுக்கும்போதே அந்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுகிறார்கள். திமுக கூட்டணியிலும் இடங்கள் பகிர்வு வேட்பாளர் பட்டியலுடனேயே வெளியிடப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இரண்டு பொதுவுடைமை கட்சிகள், காங்கிரஸ், ஆகிய கட்சிகளின் பேராளர்கள் மாவட்ட அளவில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் பேசி வருகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,368.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



