பங்குச் சந்தை மர்ம உலகம் என்பதாக, இயல்பானவர்கள் யாரும் அதனுள் நுழைய முயல்வதில்லை. தற்போது சமூக வலைதளங்களில், “முதலீட்டில் 220 விழுக்காட்டு வளர்ச்சி” என்று பிட்காயின் பற்றிய அசத்தலான பேச்சு அடிபடத்தொடங்கியிருக்கிறது. பங்குச் சந்தை மர்ம உலகம் என்றால், பிட்காயின் மாய உலகமா? ஈடுபடலாமா என்ற கேள்விக்கான நெடிய அலசலே இந்தக்கட்டுரை. 05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: உலக அளவில் பிட்காயின்கள் புழக்கத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், பிட்காயின்கள் குறித்து இன்னும் இங்கு தெளிவான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை. எண்ணிமச் செலவணி (கிரிப்டோகரன்ஸி) வணிகம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டுமே கூறியிருக்கிறது உச்சஅறங்கூற்றுமன்றம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிட்காயின் மோகம் கடந்த ஓரிரு ஆண்டுகளாக கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால், இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பிட்காயின் பற்றிய பேச்சு அடிபடத்தொடங்கியிருக்கிறது. இப்படி எண்ணிமச் செலவணி (கிரிப்டோகரன்ஸி) மீண்டும் தலைப்பாகக் காரணம், என்றுமில்லாத அளவுக்கு பிட்காயினின் மதிப்பு சடசடவென உயர்ந்து கொண்டிருப்பதுதான். முதல்முறையாக இரண்டு நாட்களுக்கு முன் 23,000 டாலர் மதிப்பை எட்டியது ஒரு பிட்காயினின் மதிப்பு. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய். இந்த ஆண்டு மட்டும் சுமார் 220விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இந்த அதிரடி வளர்ச்சியால், திடீரென பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு உயரக் காரணம் என்ன, இப்படியான எண்ணிமச் செலவணியில் (கிரிப்டோகரன்ஸி) முதலீடு செய்யலாமா? ஏன்ற ஆர்வம் ஒவ்வொரு முதலீட்டாளர்களிடமும் கிளர்ச்சியூட்டி வருகிறது. சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம் போலிருக்கிறதே என்கிற ஆர்வத்தையும் அம்மாடியோவ் முழுவதும் போய்விட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. பிட்காயின் என்றால் என்ன? என்பது நெடிய கதை. எத்தனை முறை கேட்டாலும் குழப்பம் தீரவே தீராது. அதனால் அந்தக் கதை குறித்து இப்போது குழப்பிக் கொள்ள வேண்டாம். அதனால் பிட்காயின் எப்படியானது என்று வேண்டுமானால் புரிந்து கொள்ள முயல்வோம். அதாவது இன்று நாம் பயன்படுத்தும் பணப் பரிவர்த்தனை செல்பேசி செயலிகள் போன்றதுதான் பிட்காயின். உங்களுக்கு பிட்காயின் பணப்பை ஒன்று வழங்கப்படும். அதைக்கொண்டு உங்களால் பிட்காயினை அனுப்பவும் பெறவும் முடியும். பொதுவாக ஒரு பிட்காயின் அதன் முகவரி கொண்டு அடையாளம் கொள்ளப்படும். 26 முதல் 35 ஆங்கில எழுத்துகள் மற்றும் எண்களைக் கொண்டதே அந்த அடையாளம். ஒரு நாட்டின் அரசால் வழங்கப்படும் டாலர், ரூபாய், யென் போன்ற செலாவணிகளுக்கு மாற்றாகவே இந்த எண்ணிமச் செலாவணிகளும் கொண்டுவரப்பட்டன. உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒற்றை செலாவணி இருக்கவேண்டும் என்ற நோக்கில்தான் பிட்காயின் போன்ற செலாவணிகள் உருவாகின. இன்றைக்கு நமது ரூபாயையும் எண்ணிம பரிமாற்றம் செய்கிறோம்தாம். ஆனால் நமது ரூபாய் எண்ணிமச் செலாவணி அல்ல. எண்ணிம பரிமாற்றத்திற்கும் பிட்காயின் போன்ற எண்ணிமச் செலாவணிக்கும் வேறுபாடு உண்டு. இப்போது நாம் செய்யும் எண்ணிம பரிவர்த்தனைகளில் உண்மையான செலாவணியை எண்ணிம வடிவில் பரிமாறிக்கொள்வோம். அதாவது, 100 ரூபாய் தாளைக் கையில் எடுத்துச் செல்லாமல் எண்ணிமமாக பரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், 100 ரூபாய் என்பது ரூபாய்தாள்தான். ஆனால், பிட்காயின் போன்றவை முழுமையான எண்ணிமச் செலாவணியாகும். அவை எண்ணிம வடிவிலேயே உருவாக்கப்பட்டு, எண்ணிம செலாவணியாகப் புழக்கத்தில் விடப்படுபவை. எடுத்துக்காட்டாக, ஒரு கடையில் பொருட்கள் வாங்கி வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என எடுத்துக்கொள்வோம். 100 ரூபாய் செலுத்தவேண்டும் என்றால் அந்தக் கடை உங்கள் கணக்கிலிருந்து 100 ரூபாயை வங்கியிடம் கேட்கும். அந்த வங்கி அந்தத் தொகை உங்களிடம் இருப்பில் இருக்கிறதா என்று பார்த்து அந்தத் தொகையைக் கடைக்கு அனுப்பிவைக்கும். அனைத்தும் எண்ணிமப் பரிமாற்றம் என்பதால் எல்லாம் நொடிகளில் நடந்துவிடுகிறது. பரிவர்த்தனைகள் மற்றும் தொகை இருப்பு கணக்குகளை வங்கிகள் பேணும். இப்படி ஒரு அமைப்பே தேவையில்லை என்கின்றன பிட்காயின் என்கிற எண்ணிமச் செலாவணிகள். பிட்காயினில் ஏற்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் கருப்புச் சங்கிலி (பிளாக்-செயின்) முறையில் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்றை மட்டும் மாற்றுவது முடியாத செயல். மொத்த சங்கிலியிலும் அது மாற்றத்தை உண்டாக்கும். இதனால் இதில் முறைகேடுகள் நடக்கவோ, திருட்டுகள் நடக்கவோ வாய்ப்பில்லை. இந்த சங்கிலியை வைத்திருக்கப் பல கணினிகள் தேவைப்படும். இதற்குத் தேவையான கணினித் திறனைக் கொடுப்பதன் மூலம் நீங்களும் சங்கிலியின் ஒரு பகுதியாக மாறுவீர்கள். உலகமெங்கும் இப்படி இந்த சங்கிலியில் பலரும் இருப்பார்கள். இவர்களின் கணினிகள் அனைத்தும் சேர்ந்துதாம் ஒரு பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும். இப்படி சங்கிலியில் ஒரு பங்காக இருப்பதால் என்ன பயன் கிடைக்கும்? இதைச் செய்வதற்கு அவ்வப்போது புது பிட்காயின் உருவாக்கப்பட்டு உங்களுக்குக் கொடையாக அது தரப்படும். இப்படி பிட்காயின் பெறுவதை 'பிட்காயின் சுரங்கம்” என்பார்கள். இப்படி இருப்பதால்தான் பிட்காயினை உலகளாவிய பரவலான செலாவணி என்கிறார்கள். பிட்காயினை ஒருவர் மூன்று வழிகளில் பெற முடியும். ஒன்று கணினித்துவ வசதிகள் கொண்டு, பிட்காயின் சுரங்கம் மூலமாக பிட்காயின்களை பெறலாம். இதைத்தான் சமூக வலைதளங்கள் பரவலாக அறிமுகப்படுத்தி வருகின்றன. இங்கே கணினித்துவத்தை உலகளாவி பல ‘கணினி முனைவர்கள்’ நிறுவி வைத்துக் கொண்டு நமது செல்பேசி, மற்றும் கணினியை பங்களிப்பதற்கு குறைந்த ஆதாயத்தை பிட்காயினின் சட்டோசிகளாக நமக்கு வழங்கி வருகிறார்கள். பத்துகோடி சட்டோசிகள் சேர்ந்ததுதான் ஒரு பிட்காயின் ஆகும். இன்னொரு வகையாக- நாம் விளம்பரங்களைப் பார்ப்பதற்கும், கணக்கெடுப்புகளைச் செய்வதற்கும் என நமது பங்களிப்பிற்கு சட்டோசிகளை வழங்குவதற்கு உலகளாவி பல்;;;;;;லாயிரம் ‘கணினி முனைவர்கள்’ தற்போது இணையத் தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். ஆக இந்த வகைமையில் பிட்காயின் பெறுவது ஒரு வழியாகும். அடுத்ததாக, ஏற்கெனவே பிட்காயின் வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து அதை வாங்கலாம். இது அல்லாமல் தற்போது பிட்காயின்களை பரிமாறிக்கொள்ளப் பங்குச்சந்தை போன்று ‘பிட்காயின் சந்தை’ அமைப்புகளையும் சில நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. இதில் பணம் கொடுத்து பிட்காயின்களை உங்களால் பெற முடியும். இப்படி பங்குச்சந்தை போன்ற ஒரு கட்டமைப்புக்குள் வந்துவிட்டதால் ஒரு பிட்காயினுக்கு பண மதிப்பு ஒன்று நிர்ணயிக்கப்பட்டது. இது தேவை- பற்றாக்குறையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். தேவை அதிகரித்திருப்பதால் இப்போது பிட்காயின் வரலாறு காணாத வளர்ச்சியை கண்டுவருகிறது. பிட்காயினுக்கென இன்னொரு சிறப்பும் உண்டு, புதிய பிட்காயின்களைக் குறிப்பிட்ட அளவுதான் உருவாக்க முடியும். தனிநபர் ஒருவர் மட்டும் அதிகப்படியான பிட்காயின்களை உருவாக்கி லாபம் பார்க்க அனுமதிக்காது பிட்காயின் நெறிமுறை. உலகமெங்கும் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்க முடியும். அதுதான் எல்லை. இப்போதுவரை 1.85 கோடி பிட்காயின்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இதனால்தான் தேவை அதிகரிக்க மதிப்பும் எகிறுகிறது. ரூபாய்க்கு காசுகள் இருப்பது போல பிட்காயினிலும் பகுதியாகப் பரிவர்த்தனைகள் செய்ய முடியும். பிட்காயினின் மிகக் குறைந்த பின்னம் சடோசி என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் உத்தரவின் பேரில் எண்ணிமச் செலாவணி பரிமாற்ற கணக்குகளை முடக்கியது இந்திய வங்கிகள். ஏண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) பரிவர்த்தனைகளை அப்போது தடைசெய்திருந்தது. உச்சஅறங்கூற்றுமன்றம் இந்தத் தடையை நீக்குமாறு ஒன்பது மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்திருந்த பணத்தையும், காப்பீடு முதலீடுகளையும் பிட்காயின் பக்கம் திருப்ப ஏற்கெனவே குறைவான இருப்பு இருக்கும் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளன. இப்போது உலக அளவில் பிட்காயின்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது சீனாவில்தான். அடுத்த இடத்தில் இருப்பது நாம்தான். ஆனால், இன்னும் இங்கு தெளிவான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை. எண்ணிமச்செலாவணி (கிரிப்டோகரன்ஸி) வணிகம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டுமே கூறியிருக்கிறது உச்சஅறங்கூற்றுமன்றம். இது தொடர்பான எந்தவொரு சட்டமும் இந்தியாவில் இல்லாத நிலையில், அதை இந்தியக் கட்;டுப்பாட்டு வங்கியால் தடைசெய்ய முடியாது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா உள்ளிட்ட 10 நாடுகள் எண்ணிமச்செலாவணியைத் (கிரிப்டோகரன்ஸி) தடை செய்திருக்கின்றன. சீனா, இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளில் எண்ணிமச்செலாவணியை (கிரிப்டோகரன்ஸி) வைத்திருக்கலாம். ஆனால், வணிகப் பயன்பாட்டுக்கோ வேறு வகையான நேரடிப் பணப் பரிமாற்றங்களுக்கோ அவற்றைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் ஜப்பான், சிங்கப்பூர், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 15 நாடுகள் எண்ணிமச்செலாவணியை (கிரிப்டோகரன்ஸி) அதிகாரப்பாடாகவே அங்கீகரித்திருக்கின்றன. இவை தவிர, மற்ற நாடுகள் எந்த விதமான தடையும் நடைமுறைப்படுத்தவில்லை. பிட்காயின் முறையை தொடங்கியவர்கள் இதை ஒரு முதலீட்டு முறையாகப் பார்க்கவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் பணத்திற்கு மாற்றாகவே பார்த்தனர். ஆனால், மக்களின் போக்கு இதை ஒரு முதலீடாக மாற்றியிருக்கிறது. இருந்தும் பொருளாதார நிபுணர்கள் பிட்காயினில் முதலீடு செய்யலாம் எனப் பரிந்துரைக்கத் தயங்கவே செய்கின்றனர். வெறுமனே தேவை-பற்றாக்குறையை மட்டும் வைத்து மதிப்பு இப்படி கன்னாபின்னாவென ஏறி இறங்குவதால் யாராலும் துணிச்சலாக எண்ணிமச்செலாவணியில் (கிரிப்டோகரன்ஸி) முதலீடு செய்யலாம் எனச் சொல்ல முடியவில்லை. பொருளாதார நிபுணர்கள் பிட்காயின் குறித்து இந்த முதன்மையான தகவலையும் குறிப்பிடுகின்றனர். தங்கம், பணம் போன்று பிட்காயினுக்கு பின் உண்மை உலகில் எந்த பொருளோ, சொத்தோ கிடையாது. அதனால் முறையாக அரசு அமைப்புகள் இதை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே நிலையான முதலீட்டுக்கான ஒன்றாக பிட்காயின் மாறும் என்பதாகும். ஆக பங்குச் சந்தை மர்ம உலகம் என்றால், பிட்காயின் மாய உலகமே. ஆனால் நிறைய சட்டோசிகள் தரும் கணினி முனைவர்கள் மூலமாக நீங்கள் பிட்காயின் வருவாய் ஈட்ட தாராளமாக உங்கள் பொழுது போக்கு நேரத்தை செலவிடலாம். எதிர்பாராத முன்னேற்றமும் காணலாம். வாழ்த்துக்கள்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



