திராவிட இயக்கத் தோற்றத்தில் இருந்து, நாடகம், இசை, இயல் என்று முத்தமிழ்க் குதிரைகள் பூட்டிய வண்டியில்தாம், அரசியல் பயணித்து, மக்கள் மனதிற்குள் விரைந்து பாய்ந்தது. அந்த வகையில் ஒவ்வொரு நடிகருக்கும் எம்ஜியார்போல அரசியலில் புகழ் பெற்றிட வேண்டும் என்ற ஆசைத் தொற்றிக் கொண்டு விடுகிறது. அந்த வரிசையில் இப்போது விஜய்யும். 05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: திராவிட இயக்கத் தோற்றத்தில் இருந்து, நாடகம், இசை, இயல் என்று முத்தமிழ்க் குதிரைகள் பூட்டிய வண்டியில்தாம், அரசியல் பயணித்து, மக்கள் மனதிற்குள் விரைந்து பாய்ந்தது. அந்த வகையில் ஒவ்வொரு நடிகருக்கும் எம்ஜியார்போல அரசியலில் புகழ் பெற்றிட வேண்டும் என்ற ஆசைத் தொற்றிக் கொண்டு விடுகிறது. எம்ஜியார் அவர்கள்- மக்கள் கொண்டாடும் தளத்தில் மட்டுமே நடித்தார்; பயணித்தார். ஆனால் இன்றைக்கு எப்படிவேண்டுமானாலும் நடித்து விட்டு, எப்படி வேண்டுமானாலும் பயணித்து விட்டு, தாங்களும் எம்ஜியார் அவர்களைப் போல புகழ்பெற வேண்டும் என்று எல்லா நடிகர்களும் ஆசைப்படுகின்றனர். அவர்களுடைய கொண்டாடிகளும் அதற்கு கொம்பு சீவுகின்றனர். அந்த வகையில் கலைஞரும், செயலலிதாவும் அரசியலுக்கு நிரந்தர விடை அளித்த நிலையில்- தாங்கள் அந்த இடத்தை கைப்பற்றிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் எல்லா நடிகர்களும். கமல் வந்தே விட்டார். இரஜினி நமக்கு வேண்டுமா அரசியல் என்று நினைத்தாலும், பாஜக- திமுகவை வீழ்த்த அவர் பயன்பட மாட்டாரா என்ற நப்பாசையில் அவரை பாதி அரசியலுக்குள் இழுத்து விட்டு விட்டார்கள். விஜய் போன்றவர்கள் ஒரு பக்கம் அப்பாவாலும் மறுபக்கம் கொண்டாடிகளாலும் நிர்பந்திக்க படுகின்றார். விஜய்யின் கொண்டாடிகள் அந்தக் கட்சிக்குப் போகலாமா? இந்தக் கட்சிக்குப் போகலாமா? அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான்- நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும், யாரும் மாற்றுக் கட்சியில் இணையாதீர்கள் என நடிகர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தின் கீழ் விஜய் கொண்டாடிகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த இயக்கத்தின் மூலம் நடிகர் விஜய்யும் உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது கொண்டாடிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள். இசை வெளியீட்டு விழா, படத்தின் வெற்றி விழா என பெரும்பாலான விழாக்களில் விஜய் அரசியல் பேசினார். இரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று நப்பாசை கொள்ளுகிற பாஜக- விஜய் அரசியலுக்கு வந்து விடக்கூடாது என்பதில் விழிப்போடு இருக்கிறது. அவரது அரசியல் பேச்சை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்று- அவரது வீட்டில் வருமான வரித் துறை சோதனையை முன்னெடுத்தது. ஆனால் அசராத விஜய், மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவிலும் வாழ்க்கை என்பது ஆறு மாதிரி, சிலர் வணங்குவாங்க, சிலர் வரவேற்பாங்க, சிலர் கல் எறிவாங்க, ஆனால் நாம் கடமையை செஞ்சுட்டு போய்ட்டே இருக்கணும் என்றார். இந்த நிலையில் விஜய் அரசியல் வருகை குறித்து நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அவரின் அப்பா இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யின் பெயரை பயன்படுத்தி ஒரு கட்சியை தொடங்கியபோது தனது பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என விஜய் தடாலடியாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த விஜய் கொண்டாடிகள் பலர் மாற்றுக் கட்சியில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் விஜய் அதிருப்தி கொண்டாடிகளை அழைத்து காணொளி மூலம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், பனையூர் அலுவலகத்திற்கு அதிருப்தி நிர்வாகிகள், கொண்டாடிகளை வரவழைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அப்போது அவர், ‘நீங்கள் நினைப்பது அனைத்தும் விரைவில் நடைபெறும். மாற்று கட்சியில் யாரும் சேர வேண்டாம்’ என நிர்வாகிகளை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



