இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை இடம் பெறச்செய்ய முயலவில்லை ஒன்றிய பாஜக அரசு. 10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை இடம் பெறச்செய்ய முயலவில்லை ஒன்றிய பாஜக அரசு. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போர் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது. அந்த இறுதிப்போரின் போது பல லட்சம் தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இலங்கை போர்த்துறை அநாகரிகமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் பலமுறை வலியுறுத்தியது. ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் இலங்கை அரசு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. மேலும் இலங்கை போரின் போது காணாமல் போனோர் கதி என்ன என்பது தொடர்பாகவும் இலங்கை அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதற்கு நியாயம் கேட்டு இலங்கையில் தமிழர் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில் பல ஆண்டுகளாக குடும்பம் குடும்பமாக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை விசாரித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானம் வெற்றிபெற வாக்களித்த இருபத்தி இரண்டுநாடுகளில் முன்னதாகவே அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோசியா, சைப்ரஸ், டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ் என உலகின் பல்வேறு நாடுகள் தீர்மானத்திற்கு உடனடியாக ஆதரவு தெரிவித்திருந்தன. இன்னொரு பக்கம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் என்பதாக- சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கை போர்க்குற்றத்தை நியாயப் படுத்தும் அணியில் உள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் அவையில் உலக நாடுகளின் தீர்மானத்தின் மீது நேற்றும் இன்றும் விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சோதனை முறையிலான வாக்கெடுப்பிலேயே இந்தியா இதில் பங்கேற்கவில்லை என தெரிவித்தது. இவ்வாக்கெடுப்பில் 22 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. ஆனால் பாஜக ஆளும் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. தமிழர் தாயகமான நாவலந்தேயமே இந்தியா என்கிற நிலையில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவின் இந்த நிலைப்பாடு உலகத் தமிழர்களை பெரும் ஏமாற்றம் அடைய செய்துள்ளதாகப் பேசப்படுகிறது. இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை நசுக்கிவிட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் 40,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மற்றும் பிற தொண்டூழிய அமைப்புகள் மதிப்பிடுகின்றன. பல்லாயிரக் கணக்கானோர் இந்தப் போர் காலத்தில் காணாமல் போய்விட்டனர். இலங்கை அரசுக்கு எதிராகப் போராடிய தமிழ் மக்கள், இலங்கையிடம் சரணடைந்தவர்கள் அல்லது பிடிபட்டவர்கள் காணாமல் போனதற்கு, இலங்கை அரசுப் படையினர் மீது குறை கூறப்பட்டது. அப்போதிலிருந்து, கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன தமிழர்களின் குடும்பம் நீதிகேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோரி வருகிறார்கள். ஆனால் இலங்கை அரசோ தமிழ் மக்கள் காணாமல் போனதற்கு, தான் பொறுப்பல்ல என தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுக்கிறது. முன்னதாக, இந்தத் தீர்மானம் மீதான இறுதி வாதத்தின்போது இலங்கை அரசு சார்பில் பேசிய அதன் பேராளர், “எங்கள் நாட்டுக்கு எதிராக முன்மொழியப்பட்ட இந்த வரைவுத் தீர்மானம் பற்றிய அசாதாரணமான யோசனை, பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும். இதை அனுமதித்தால் இது மிகப்பெரிய ஆபத்தாக மாறும். இந்த தீர்மானத்தின்படி திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தால், அதற்காக 2.8 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி தேவை. அதுமட்டுமின்றி, ஏற்கெனவே இலங்கை அரசு ஒரு நடவடிக்கையை எடுத்து மனித உரிமைகளை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்மானம், இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும். இலங்கை இந்தத் தீர்மானத்தை நிராகரிக்கிறது. இந்தத் தீர்மானத்தை மற்ற நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறினார். ராஜபக்ஷ சகோதரர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தபின் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றன. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தால் தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். இந்த இரண்டு கூறுகளையும் கருத்தில் கொண்டே இந்திய அரசு இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்று சிலரால் சொல்லப்பட்டு வருகிறது. மு.க. ஸ்டாலின், ப.சிதம்பரம் உள்ளிட்ட பல முதன்மைத் தமிழ் அரசியல்வாதிகள் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை இந்திய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தனர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று, ஏழாண்டுகளுக்கு முன்பும் இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்போதும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்திய அரசு விலகியிருந்தது. அப்போதும் தீர்மானத்திற்கு ஆதரவாக இருபத்தி இரண்டு நாடுகள் இருந்தன. ஆனால் 47 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்திருந்தன. தற்போது அந்த 47 நாடுகளில் 36 நாடுகள் தீர்மானத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. வெறும் பதினோரு நாடுகள் மட்டுமே தற்போது தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருக்கின்றன. அனால் இந்தியாவின் நிலைப்பாடு மாறவேயில்லை என்கிற நிலையில்- காங்கிரஸ் அரசின் போதும் சரி, இன்றைய பாஜக அரசின் போதும் சரி, இந்தியா ஆட்சியாளர்கள் உலகின் எந்த மூலையில் வாழும் தமிழருக்கும் ஆதரவு நிலைப்பாட்டில் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியவருகிறது. இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்த செயல்பாட்டை, தமிழக கட்சிகளான திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை விமர்சித்துள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பாஜக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார். மேலும்- ஒன்றிய அரசு முறையான விளக்கம் எதையும் சொல்லவில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலாவது ஈழத் தமிழர்க்கு ஆதரவான நிலைப்பாட்டை மோடி அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், உலகத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது மோடி அரசு. இன்றைய நாளில் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அரசின் பேராளர் பங்கெடுக்கவில்லை. இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்" என்று கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் இந்தப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைக் ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்தன. இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிப்பாட்டுத் துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார். அதேபோல இன்று, இந்திய அரசின் பேராளர் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்புச் செய்தார்கள். இல்லையேல், இலங்கை;கு ஆதரவாகவே ஓட்டுப்போட்டு இருப்பார்கள்," என கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ‘வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்ததன் மூலம் இலங்கையை மறைமுகமாக இந்தியா ஆதரித்திருக்கிறது, என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசின் போதும் சரி, இன்றைய பாஜக அரசின் போதும் சரி, இந்தியா ஆட்சியாளர்கள் உலகின் எந்த மூலையில் வாழும் தமிழருக்கும் ஆதரவு நிலைப்பாட்டில் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியவருகிற நிலையில், தமிழ்த் தலைவர்கள் தமிழக ஆட்சி நிருவாகத்திற்கு மட்டுமே முனைந்து கொண்டிருக்காமல்- ஒன்றிய ஆட்சியின் அதிகாரத்திற்கும், இந்தியாவின் மற்ற மற்ற மாநிலத்தின் ஆட்சி நிருவாகத்திற்கு மட்டுமே முனைகிற கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு ஒன்றிய ஆட்சிக்கு முனைவது மட்டுமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.