ஜியோ மாதிரி ஒரு வணிக நிறுவனந்தான், உலகையே கட்டிஆள்வதற்கு பிரித்தானியருக்கு களம் அமைத்துக் கொடுத்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம். 21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பேச்சுவழக்கில் ஜான் நிறுவனம் எனவும் அறியப்பட்டது. தொடக்கத்தில் இதன் சாற்றுரையில் ‘கிழக்கிந்தியாவில் வணிகம் புரிய இலண்டன் வர்த்தகர்களின் நிறுவனமும் ஆளுநரும்’ என்றிருந்தாலும் இதன் வணிகம் உலக வணிகத்தில் பாதியளவிற்கு உயர்ந்தது. பருத்தி, பட்டு, தொட்டிச் சாயம், உப்பு, வெடியுப்பு, தேயிலை, அபினி ஆகிய அடிப்படை பொருட்களில் வணிகமாற்றியது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம். இந்தியாவில் நம்ம ஜியோ நிறுவனத்திற்கு மோடியால் அங்கீகாரம் கிடைத்துள்ளது போலத்தான்;- இன்னும் கொஞ்சம் கூடுதலாக வெளியொரு நாடான இந்தியாவில் பிரித்தானியாவுக்கு வணிக முறையிலான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, முதலாம் எலிசபெத் மகாராணியால் நானூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் தனியுரிமையை இந்நிறுவனத்துக்கு வழங்கியது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்- ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட போதும், இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு விரிவடைய அடித்தளம் வகுத்தது. ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், இலங்கை முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. 162 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை ஐக்கிய இராச்சியம் நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது. இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இந்நிறுவனம், பிரித்தானியப் பேரரசு உருவாவதில் தலைமை வகித்தது எனலாம். 303 ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தில் சுங்க வரிகளைக் கட்டுவதிலிருந்து விலக்களிக்கும் ஆணையொன்றை நிறுவனம் முகலாயப் பேரரசிடமிருந்து பெற்றுக்கொண்டது. இது இந்திய வணிகத்தில் நிறுவனத்துக்கு தெளிவான முன்னுரிமையை வழங்கியது. 263 ஆண்டுகளுக்கு முந்தைய பிளாசி போரில் இராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றி, கிழக்கிந்திய நிறுவத்தை ஒரு வணிக மற்றும் இராணுவ வலிமை கொண்டதாக்கியது. தொடர்ந்த மூன்று ஆண்டுகளில் பாண்டிச்சேரி போன்ற ஓரிரு இடங்களைத் தவிர்த்து இந்தியாவின் ஏனைய இடங்களிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் துரத்தப்பட்டனர். 72,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களைத் தொடக்க மூலதனமாகக் கொண்டிருந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் 125 பங்குதாரர்கள் இருந்தனர். நிறுவனம் பெருமளவு இலாபம் ஈட்டத் தொடங்கியது. முகலாயப் பேரரசரான ஜஹாங்கீரிடம், நிறுவனத்துக்குச் சாதகமான போக்கு ஏற்பட வழி வகுத்தது. தொலைதூரக் கடல்களில் இடம்பெற்ற வணிகம் தொடர்பான போர்களின் பயனற்ற தன்மையை உணர்ந்த இந்நிறுவனம், பிரித்தானியா, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் அதிகாரப்பாட்டு அனுமதியுடன், இந்தியாவில் காலூன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முற்பட்டது. இது குறித்து முகலாய அரசுக்கு ராஜதந்திர அடிப்படையிலான தூது அனுப்பும்படி பிரித்தானிய அரசை நிறுவனம் கேட்டுக்கொண்டது. 405 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானிய அரசனான முதலாம் ஜேம்ஸ், அக்காலத்தில், இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கனிஸ்தானையும் சேர்த்து ஆண்டுவந்த முகலாயப் பேரரசனாகிய ஜஹாங்கீரிடம், சர் தோமஸ் ரோ என்பவரைத் தூது அனுப்பியது. சூரத்திலும், ஏனைய பகுதிகளிலும், கம்பனியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து, நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வணிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதே இத் தூதின் நோக்கமாகும். இதற்குப் பதிலாக ஐரோப்பியச் சந்தைகளிலிருந்து பண்டங்களையும், அருமையாகக் கிடைக்கக்கூடிய வேறு பொருட்களையும், மன்னருக்கு வழங்குவதாக நிறுவனம் ஒத்துக்கொண்டது. இந்தத் தூது வெற்றிகரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வணிகர்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அவர்கள் விரும்பிய, வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துப் பிரித்தானிய மன்னருக்கு, ஜஹாங்கீர் கடிதம் எழுதினார். இத்தகையதொரு வெளிப்படையான ஆதரவின் கீழ் கோவா, பம்பாய் (இப்பொழுது மும்பாய்) போன்ற இடங்களில் தளங்களைப் பெற்றிருந்த போத்துக்கீசரை நிறுவனம் பின்தள்ளியது. நிறுவனம் சூரத், மதராஸ் (இப்பொழுது சென்னை) பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் தனது வலுவான நிலைகளை அமைத்துக்கொண்டது. 381 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. நிறுவனம் கம்பெனி ஆட்சியை இந்தியாவில் நிறுவி ஆலைகள் எனப்பட்ட 23புறக்காவல்நிலைகள் அமைத்தது. இவற்றுள் முக்கியமானவை வங்காளத்தில் உள்ள வில்லியம் கோட்டை, சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை, பம்பாய்க் கோட்டை என மதிலால் சூழப்பட்ட கோட்டைகள் ஆகும். 350 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது சார்லஸ் மன்னர் நிறுவனத்துக்கு மேலும் பல உரிமைகளை வழங்கினார். இது தொடர்பாக ஐந்து தொடர்ச்சியான சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, சுதந்திரமான ஆட்சிப்பகுதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும் நாணயங்களை வெளியிடவும், கோட்டைகள், படைகள் முதலியவற்றை வைத்திருக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும், போரில் ஈடுபடவும், சமாதானம் ஏற்படுத்திக்கொள்ளவும், கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில் குடிசார் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவும், நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. வணிகப் போட்டியாளர்களாலும் பிற வல்லரசுகளாலும் பகைமை கொண்ட சில உள்ளூர் ஆட்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்த நிறுவனம் தனது பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கு இத்தகைய உரிமைகள் வாய்ப்பாக அமைந்தன. 340 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளை நிறுவனம் உருவாக்கியது. வலிமை மிக்க படைபலத்துடன் வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களைச் சுதந்திரமாக நிர்வகித்துக்கொண்டு இந்தியாவில் கம்பெனி ஆட்சி 163 ஆண்டுகளுக்கு முன்பு முதல் நிலைப்படுத்தப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



