ஆங்கிலேயன் ஒருங்கிணைத்துக் கொடுத்த இந்தியாவும், நடுவண் அரசுக்கு வானளாவி அதிகாரம் அமைத்துக் கொடுத்த சட்டமும் இனிக்கிறது! ஆங்கிலம் மட்டும் எப்படி கசக்கும்? ஹிந்தி பேசாதா மக்களுக்கு, இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஆங்கிலக்கசப்பு அறிவுரை கொடுத்து வரும் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் தமிழகம் மட்டுமே தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: விடுதலை கொடுத்து விட்டு இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆங்கிலேயன் விட்டுச் சென்றது ஆங்கிலம் மட்டும் அல்ல. ஆங்கிலேயர் இந்தியாவை கொடுத்து விட்டுச் செல்லும் போது, பிரித்தானிய அரசு, இந்திய மக்கள் மீது ஏதும் கடன் வாங்கியிருக்கவில்லை. ஆனால்- நேற்றைய காங்கிரஸ் அரசும், நடப்பு பாஜக அரசும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலைக்கும் தோராயமாக வாங்கியிருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய். இதுவும் கூட கடந்த ஆண்டு கணக்கீடுதான். நேற்றைய காங்கிரஸ் அரசும் சரி, இன்றைய பாஜக அரசும் சரி அந்தக் கட்சிகளின் தலைமை ஹிந்தி வெறியர்கள் கையில் இருப்பதால்- அன்னிய மொழிக்கான ஆங்கிலத்திற்கு ஹிந்தி பேசாத மக்கள் அடிமையாக இருப்பதா? இந்தியாவில் அதிகம் பேசும் மக்கள் மொழியான ஹிந்திக்கு அடிமையாவதில் என்ன சிக்கல்? என்பதாக மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் ஹிந்தித் திணிப்பு முயற்சியை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு முறை திணிப்பில் ஈடுபடும் போதும் தமிழகத்திலும் விதவிதமான பதிலடிகள் கொடுக்கப்பட்டே வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் நடுவண் ஆயுதப்படை பெண் காவலர், ஒருவர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை பார்த்து ‘தும் பாரதியாங் ஹைங்’ என்று கேள்வி கேட்ட சர்ச்சை இன்னும் முடியவில்லை. இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும் தனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் தன்னை மோசமாக நடத்தியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். டெல்லியில் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயுர்வேத மற்றும் யோகா மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு நடுவண் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் ஹிந்தியில் பயிற்சி எடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட மருத்துவர் ஒருவர் ஹிந்தியில் பேசினால் எங்களுக்கு புரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அந்த செயலாளர் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. உங்களுக்கு ஹிந்தி தெரியாவிட்டால், கூட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளவும் என்று தெரிவித்ததாக தகவல்களும், காணெளியும் வெளியாகி ஒட்டு மொத்த இந்தியாவையே ஆட வைத்துள்ளது. இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது திரை உலகில் பலர் ஹிந்திக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். நடிகர்கள், இசையமைப்பாளர்கள் ஹிந்திக்கு எதிராக பேச தொடங்கி உள்ளனர். இளம் நடிகர்கள், பேரறிமுகங்கள் பலர் இந்தத் தலைப்பில் குதித்து உள்ளனர். யுவன் அணிந்துள்ள சட்டையில், ‘ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் திருவள்ளுவர் படமும் இருக்கிறது. பலரும் யுவனின் செயலை பாராட்டி வருகிறார்கள். நடிகர் சிறீஷ் அணிந்துள்ள சிவப்பு நிறச் சட்டையில் ஹிந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரின் மனைவியும் இதே வகையான சட்டைகளை அணிந்துள்ளனர். தமிழக மக்கள் பலரும் இவர்களை பாராட்டி வருகிறார்கள்.
1.முதலாவதாக ஒருங்கிணைந்த இந்தியா.
2.ஒருங்கிணைந்த இந்தியாவை ஆளுவதற்கான சட்டம்
3.இந்தியா மொழிகளை ஒருங்கிணைப்பதற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம்
4.ஐரோப்பிய இயல்அறிவு (சயின்ஸ்)
5.நிருவாகம், நிருவாக கலாச்சாரம் மற்றும் அடையாளங்கள் வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிவது போல
6.இருப்புப் பாதைகள்
7.அணைக்கட்டுகள்
8.இன்றும் அரசு அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கிற கட்டிடங்கள்.
9.அல்லோபதி மருத்துவம்
10.மருத்துவமனைகள்
11.மெக்கலே கல்வித்திட்டம்
இப்படி ஏராளமாக விட்டுச் சென்றுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



