Show all

உலகின் அகவை முதிர்ந்த பெண் ஜப்பானில் உள்ளார்! கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகிலேயே வயதான மூதாட்டியாக ஜப்பானை சேர்ந்த 116 அகவை பெண்மணி கேன் டனாகா, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான விழாவில் கின்னஸ் அமைப்பு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இவர், ஜப்பானில் புக்குவோக்காவில் உடல்நலமுடன் வசித்து வருகிறார், அன்றாடம் காலை 6 மணிக்கே எழும் பழக்கம் கொண்ட  இவர், கணிதத்திலும் ஆர்வம் கொண்டவராம். கின்னஸ் சான்றிதழ் உடன் வழங்கப்பட்ட சாக்லெட்டை சாப்பிட்டதுடன், ஒரே நாளில் 100 சாக்லெட் சாப்பிட ஆசை என்று கூறி அனைவரையும் வியக்க வைத்தார். இதற்கு முன்பாக உலகின் முதுபெரும் பாட்டியான ஜப்பானை சேர்ந்த சியோ மியாகோ 117ஆவது அகவையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . இரண்டு மொழிகளும் ஒரே மாதிரி இலக்கண கட்டமைப்புகளை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.

யப்பான் அல்லது சப்பான் என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக்குப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. தோக்கியோ இதன் தலைநகராகும். சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. ஒக்கைடோ, ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகியன சப்பானின் முதன்மையான, மற்றும் 97 விழுக்காடு நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இது உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகிறது. மற்றும் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது. மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ள தெனினும் இது தன் தற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது.

யப்பான் அதன் பேரரசருக்கு மிகவும் குறைவான அதிகாரங்களே வழங்கும் அரசியற்சட்ட முடியாட்சி ஆகும். சடங்குசார் தலைவர் என்ற அளவில், பேரரசர் என்பவர் 'நாட்டினதும், மக்களுடைய ஒருமைப்பாட்டினதும் குறியீடு' என யப்பானின் அரசியல் சட்டம் வரைவிலக்கணம் கூறுகிறது. அதிகாரம் முதன்மையாக தலைமை அமைச்சரிடமும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடமும் உள்ளது. அதேவேளை இறைமை மக்களிடம் உள்ளது. தற்போதைய பேரரசர் அக்கிகிட்டோ ஆவார். இவருக்கு அடுத்த நிலையில், முடிக்குரிய இளவரசராக நாருகிட்டோ உள்ளார்.

ஏறத்தாழ யப்பானின் 73விழுக்காடு நிலப்பகுதி காடாக அல்லது மலைப் பகுதிகளாக இருப்பதுடன், வேளாண்மை, தொழில் துறை, குடியிருப்பு ஆகிய தேவைகளுக்கு உதவாததாக உள்ளது. இதனால், மக்கள் வாழக்கூடிய கரையோரப் பகுதிகளின் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் கூடுதலாக உள்ளது. யப்பான், உலகின் மிகக் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் ஒன்று.

யப்பானியத் தீவுகள் பசிபிக் தீ வளையத்தில் உள்ள எரிமலை வலயத்தில் அமைந்துள்ளன. இத் தீவுகள் பெரும்பாலும், நடுச் சிலூரியக் காலம் முதல் பிளீசுட்டோசீன் காலம் வரையிலான பல நூறு மில்லியன் ஆண்டுகளாக இடம் பெற்ற பெரிய பெருங்கடல் நகர்வுகளின் விளைவாக உருவானவை. இந்நகர்வு, தெற்கே பிலிப்பைன் கடல் தட்டு குமரி கண்டத்தட்டு, ஒக்கினாவாக் கண்டத்தட்டு ஆகியவற்றுக்குக் கீழ் நகர்ந்ததனாலும், வடக்கே பசிபிக் தட்டு ஒக்கோட்சுக்கு தட்டுக்குக் கீழ் நகர்ந்ததினாலும் ஏற்பட்டது. முன்னர் யப்பான் யூரேசியக் கண்டத்தின் கிழக்குக் கரையுடன் ஒட்டியிருந்தது. முற்கூறிய தட்டுக்களின் கீழ் நகர்வு, 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய யப்பான் நிலப் பகுதிகளைக் கிழக்குப் புறமாக இழுத்து இடையே யப்பான் கடலை உருவாக்கியது.

யப்பானில் 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் சுனாமியை உருவாக்கும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல தடவைகள் ஏற்படுகின்றன. 

சப்பானில் சாலைப்போக்குவரத்து நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 1.2 மில்லியன் தொலைவிற்கான நல்ல சாலைகள் இடப்பட்டுள்ளன. சுங்கச்சாலைகளும் பயன்பாட்டில் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிறுவனங்கள் உள்ளூர், வெளியூர் தொடர்வண்டி வசதிகளை அளிக்கின்றன. பெருநகரங்களை சின்கான்சென் தொடர்வண்டிகள் இணைக்கின்றன. சப்பானிய தொடர்வண்டிகள்; நேரந்தவறாமைக்குப் பெயர்பெற்றவை.

சப்பானில் 173 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நகரிடைப் போக்குவரத்திற்கு வானூர்தி விரும்பப்படுகிறது. ஆசியாவின் சந்தடி மிக்க வானூர்தி நிலையமான அனீதா நிலையம் சப்பானிலேயே உள்ளது. யோக்கோகாமா, நகோயா துறைமுகங்கள் ஆகியன பெரிய துறைமுகங்கள் ஆகும்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.