26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய திரைப்படத்தில் பேய் படத்திற்கு புதிய இலக்கணத்தை வகுத்த 'யாவரும் நலம்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யாவரும் நலம், வேட்டை ஆகிய படங்களில் நடித்த மாதவன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தார். அதன்மூலம் இன்று தமிழ் திரைப்படத்தின் முன்னணி கதைத்தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். இதற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த விக்ரம் வேதா படம் மாதவனுக்கு மேலும் பெரிய வெற்றியை பெற்று தந்தது. தற்போது மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதையில் இயக்கி, நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'யாவரும் நலம்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்தத் தகவலை மாதவன் உறுதிப்படுத்தியுள்ளார். விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படம் வித்தியாசமான பேய் படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. முதல்பாகம் கொடுத்த பயத்தை, அதிர்ச்சியை இரண்டாம் பாகம் கொடுக்குமா என்று படம் வெளியான பிறகு தெரியும். காத்திருப்போம் யாவரும் நலம் இரண்டுக்கு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.