25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை தாம்பரம்- மதுரவாயல் புறவழிச் சாலையில் கல்லூரி மாணவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதியதில் வெடித்து தீப்பிடித்ததில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் பலியானார். சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை, கன்னையா அடுக்ககத்தில் வசிப்பவர் இருளாண்டி. இவரது மகன் ராஜ்குமார் (எ) அபிஷேக் அகவை19. இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இயல்அறிவு இளவல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அன்றாடம் கொடுங்கையூரிலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று கல்லூரி முடித்து தனது நண்பர் பெரம்பூரைச் சேர்ந்த பிரான்சிஸ்சுடன் தனது பல்சர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தாம்பரம்- மதுரவாயல் புறவழிச் சாலையில் குன்றத்தூரை கடந்து கோவூர் வந்தபோது அவருக்கு முன் சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் வேன் மீது மோதியதாக கூறப்படுகின்றது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்ததில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் காயமடைந்த ராஜ்குமாரின் கால் இருசக்கர வாகனத்தில் சிக்கியுள்ளது. இதனால் மீள முடியாததால் ராஜ்குமாரும் தீயில் சிக்கினார். அவரது உடல் முழுதும் தீப்பற்றி எரிந்தது. அவர் அருகிலேயே யாரும் செல்ல முடியாத அளவுக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில் குமார் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த பிரான்சிஸ் தூக்கி வீசப்பட்டதால் கையில் எலும்பு முறிவு, தலையில் லேசான காயத்துடன் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாம்பரம், மதுரவாயல் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விபத்து குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த சக மாணவர் பிரான்சிஸ் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேன் ஓட்டுநர் வண்டலூர் கீரப்பாக்கத்தைச் சேர்ந்த செந்திலிடம் அகவை27 காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வாகனத்திலும் சிறிய தீயணைப்பான் கருவி இருக்கவேண்டும் என்பது விதி. ஆனால் போக்குவரத்துதுறை அதிகாரிகள் அதை கடுமையாக அமல்படுத்தாதால் சாலையில் மோட்டார் சைக்கிளோடு தீப்பிடித்து ராஜ்குமார் எரிந்தபோது மற்றவர்கள் செல்பேசியில் படம் பிடித்தார்களே தவிர யாராலும் தீயை அணைத்து காப்பாற்ற முடியவில்லை என்பது சோகமான ஒன்று. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,086.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.