Show all

போருக்கு புதிய இலக்கணம் வகுத்தது அமெரிக்கா! ஆக்கால தமிழர்தம் ஆநிரை கவர்தல் போல; ஈரான் மீது அமெரிக்கா இணையத் தாக்குதல்

குட்டி குட்டி நாடுகள் பொறுப்பில்லாமல் எகிறலாம். அமெரிக்கா அப்படி எகிற முடியாது என்பதை அமெரிக்கா அறிந்திருக்கிறது. இன்றைய நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், ஏதேதோ காரணம் பற்றி உலகப் போராக மாறி விடும். உலகப் போர் மூண்டால் வெறுமனே பத்தே நிமிடத்தில் உலகம் கட்டாந்தரையாக மாற்றப் பட்டு விடும். ஆயுதப் போரைத் தவிர்க்க அமெரிக்கா வர்த்தகப் போரையும், இணையப் போரையும் முன்னெடுத்திருக்கிறது. அக்கால தமிழர் போரைத் தவிர்த்து பகை முடிக்க: ஆநிரைக் கவர்தல் ஆநிரை மீட்டலை முன்னெடுத்ததைப் போல. 

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அகம், புறம் என வாழ்வை இரண்டாகப் பகுத்து புறம் என்று போர்முறைகளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். அவர்களது போர்முறை நேர்மையாக இருந்தது. காலை ஞாயிறு தோற்றத்தின் போது முரசறைந்து போர் தொடங்குவர். ஞாயிறு மறையும் வரை மட்டுமே போர் நடை பெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். பகைவர் ஆயுதத்தை இழந்த போதும், போரில் தோற்றோடும் போதும் அவர் மேல் படை செலுத்தாத அறநெறி இருந்தது. 

இன்றைக்கும், பழந்தமிழரைப் போல, இலக்கணம் வகுத்து போர் புரிய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இலங்கையில் ஒன்னரை இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து போல, அடுத்த நாட்டின் மீது படைகளை ஏவிவிட முடியாது. உலகின் அனைத்து நாடுகளும் சமமான ஆயுத பலம் கொண்டிருக்கின்றன. இரண்டு நாடுகளுக்கு இடையே முன்னெடுக்கிற போர், ஏதோதோ காரணம் பற்றி உலகப் போராக மாறிவிடும். சரியாக பத்து நிமிடத்தில் உலகம் கட்டாந்தரையாகி விடும். உலக நாடுகள் அத்துனை ஆயுதங்களை குவித்து வைத்திருக்கின்றன. 

இந்த நிலையில் தான் ஈரான் எகுறுவதும், அமெரிக்க அடக்கி வாசிப்பதுமாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் தவிர்க்கப் பட்டு வருகிறது. ஈரானை ஏக்கி விடும் எத்தர்கள் உலக அழிவுக்கே வழிவகுப்பார்கள்.

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு பெரிதாகி வருகிறது. இந்த சூழலில் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இதனால் கோபம் அடைந்த அமெரிக்க குடிஅரசுத் தலைவர் டிரம்ப், ஈரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு, பின்னர் உடனடியாக அதை திரும்பப்பெற்றார். 

ஆனாலும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ள கோப்புக்கள் தனது மேசையில் இன்னும் இருப்பதாகவும் அதற்கு எப்போது வேண்டுமானாலும் வேலை கொடுக்க முடியும் என்று அவர் கூறினார். அதே சமயம் தன் மீது ஒரு குண்டு விழுந்தால் அதற்காக அமெரிக்கா பன்மடங்கு விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

இப்படி நாளுக்குநாள் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தாம் அமெரிக்காவிற்கு கிடைத்த ஓர் பாதுகாப்பு ஆயுதம் தாம் இணையத் தாக்குதல். ஈரான் புரட்சிகர ஆயுதப்படையின் ஆயுத கட்டுப்பாட்டு கணினிகள் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் ஈரானின் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளின் கட்டுப்பாட்டு கணினிகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணி வெடிதாக்குதல் நடத்தப்பட்டதற்கும், உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கும் பதிலடியாக ஈரான் மீது இந்த இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இணைய தாக்குதலில் ஈரான் புரட்சிகர ஆயுதப்படையின் கணினிகள் பல செயலிழந்ததாகவும், அவை மீண்டும் பயன்பாட்டுக்கு வர குறிப்பிட்ட காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தியது மட்டும் இன்றி அந்நாட்டின் மீது, இதுவரை வேறு எந்த நாட்டிற்கும் விதிக்காத கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், “ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க இந்த பொருளாதாரத் தடைகள் அவசியமானது. ஈரான் தனது போக்கை மாற்றாவிட்டால் அந்நாட்டின் மீதான பொருளாதார அழுத்தம் தொடரும்” என்றார்.

இன்றைய நிலையில் இரண்டு நாடுகள் ஒன்றுக்கொன்று போரை முன்னெடுக்க முடியாது. பழந்தமிழர்கள் போர் ஆபத்து குறித்து அறிந்து, ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டலுமாக தங்கள் பகையை முடித்துக் கொள்வார்கள். அதுபோல இன்றைய நிலையில் இரண்டு நாடுகள்: வர்த்தகப் போர், இணையப் போர் ஆகியவற்றை முன்னெடுத்து பகையை முடித்துக் கொண்டேயாக வேண்டும். ஆயுதப் போர் எல்லாம் செய்ய முடியாது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,193.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.