முன்பு உருசியாவில் நடந்தது போன்றே, தற்போது துருக்கியில் பால் நிறுவனமொன்றிலுள்ள பால் தொட்டியில் அமர்ந்து குளித்துள்ளார் ஒரு ஊழியர். உணவுப் பொருளில் பொறுப்பில்லாமல் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, உலகம் முழுவதும் அதிர்ச்சியாகப் பார்க்கப் படுகிறது. 23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: துருக்கியில் பால் நிறுவனமொன்றிலுள்ள பால் தொட்டியில் அமர்ந்து குளித்த ஊழியரை அந் நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்ச்சியாகப் பார்க்கப் படுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 22,பங்குனியில் (ஏப்ரல்5) இப்படி நடந்த பால்குளியல் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சைபீரிய நகரமான ஓம்ஸ்க்கில் செயல்பட்டுவரும் ஒரு சீஸ் உற்பத்தித் தொழிற்சாலையின் ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ‘உண்மையில் எங்கள் வேலை மிகவும் போரடிக்கின்றது’ என்ற தலைப்புடன் ஆறு ஊழியர்கள் கால்சட்டை மட்டும் அணிந்துகொண்டு பால்தொட்டியில் குளித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. வெற்றி அறிகுறியாக விரல்களை உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் இந்தப் படம் வலையொளியில்; 3,00,000க்கும் மேற்பட்ட சாடல் கருத்துக்களைப் பெற்றிருந்தது. சிரித்தபடி அந்த ஊழியர்கள் குளித்துக் கொண்டிருப்பது சீஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பச்சைப்பால் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இதுமட்டுமின்றி திறந்த மார்புடன் தூய்மையற்ற பகுதியில் ஊழியர்கள் சீஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களைத் திரட்டிக்கொண்டிருப்பதும் காணொளிக் காட்சிகளாக வெளியிடப்பட்டது, பொதுமக்களிடையே ஆத்திரத்தைத் தூண்டியிருந்தது. சிறப்பான சீஸ் தயாரிப்பிற்குப் பெயர்போன இந்தத் தொழிற்சாலை அந்த ஆண்டில் அதுவரை 14 நகரங்களில் 49 டன்னுக்கும் மேலாக சீஸ் விற்பனை செய்திருந்தது. இணையதளக் கருத்துகளைத் தொடர்ந்து ரஷ்யாவின் உணவுக் கண்காணிப்பு நிறுவனம் இந்தத் தொழிற்சாலை உற்பத்தியை தடை செய்திருந்தது. அது போன்றே, தற்பொழுது துருக்கியில், கொன்யா என்ற இடத்தில் செயற்பட்டு வந்த பால் நிறுவனத்தில், ஊழியரொருவர் பால் தொட்டியில் அமர்ந்து அதிலுள்ள பாலை தலைக்கு ஊற்றி குளிக்கும் காணொளி இணையத்தில் தீயானது. இதையடுத்து பாலில் குளித்த நபரையும் அதைக் காணொளியாக பதிவு செய்த ஆளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பாதுகாப்பு குறைபாட்டை காரணம் காட்டி, பால் நிறுவனத்துக்கு அதிகாரிகள் மூடி முத்திரை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



