Show all

கொரோனா வேதனைக்கு இடையே ஒரு சாதனை! நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அனுப்பிய விண்வெளி ஓடம், அனைத்துலக விண்வெளி நிலையத்தை அடைந்தது

நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அனுப்பிய விண்வெளி ஓடம், அனைத்துலக விண்வெளி நிலையத்தை அடைந்தது, கொரோனா வேதனைக்கு இடையிலும் அமெரிக்கா முன்னெடுத்த சாதனை ஆகும்.

19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைத் தாழ்-புவி சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு செயற்கை கோள் ஆகும். 

பன்னாட்டு மக்கள் ஒன்றாக உழைத்து உருவாக்கி வரும் ஒரு விண்வெளி நிலையம், நிலவுருண்டையில் இருந்து 360 கி.மீ உயரத்திலே, காற்று(வளி) மண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியிலே, 92 மணித்துளிகளுக்கு ஒருமுறை நில உருண்டையச் சுற்றி வருகின்றது. 

இந்த அனைத்துலக விண்வெளி நிலையத்தை உருவாக்கியது ஒரு பெரும் விண்வெளியியல் மற்றும் பொறியியல் வெற்றி ஆகும். இந்நிலையத்தை இயக்கவும், பழுது பார்க்கவும் ஆய்வுகள் நடத்தவும் எப்பொழுதும் இரண்டு பேர்கள் அங்கே இருப்பர்கள். கடந்த இருபது ஆண்டுகளாக யாரேனும் 2 பேர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். 

இந்நிலையத்தை இயக்கத்தேவையான எல்லாப் பொருட்களையும், கட்டுமானப் பொருட்கள் முதற்கொண்டு எல்லாவற்றையும், பூமியில் இருந்து விண்ணூர்தி வழியாக எடுத்துச் செல்லவேண்டும். இப்பெரும் பன்னாட்டுக் கூட்டு முயற்சியில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள் யாவை என்றால், அமெரிக்காவின் நாசா, உருசிய கூட்டாட்சி விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சப்பானிய வான் விண்வெளி வெளித்தேடல் நிறுவனம், கனடா விண்வெளி நிறுவனம் ஆகியனவாகும். இவையன்றி, பிரேசில் விண்வெளி நிறுவனமும் இத்தாலிய விண்வெளி நிறுவனமும் பல்வேறு நிலைகளில் பங்கு கொள்ளுகின்றன.

இந்த அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பன்னாட்டைச் சேர்ந்த பலர் சென்று இருந்து திரும்பி இருக்கிறார்கள். வியப்பூடும் விதமாக, பொது மக்களில் மூன்று பேரும் சுற்றுலாப் பயணமாக சென்று திரும்பியுள்ளார்கள்.

அனைத்துலக விண்வெளி நிலையமானது ஒரு ஆய்வகமாகவும், விண்ணியல் நோக்ககமாகவும் மற்றும் தொழிலகமாகவும் செயல்பட உருவாக்கப்பட்டது. மேலும் இது நிலவு, செவ்வாய் மற்றும் குறுங்கோள்களை நோக்கி செலுத்தப்படும் எதிர்கால விண்கலன்களுக்கு அணுகு தலமாகவும், அவற்றை பேணுமிடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. 2010ஆம் ஆண்டின் அமெரிக்க விண் கொள்கையில் இந்த அனைத்துலக விண்வெளி நிலையத்தை பொருளாதார, அரசியல் மற்றும் கல்விக்காகவும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பூமியில் மனிதர்களால் அடைய முடியாத ஈர்ப்பு விசையில்லா நிலையை அனைத்துலக விண்வெளி நிலையம் அமைத்துத் தருகிறது. அத்தகைய நிலையில் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளுக்கு இது பெருந்துணையாக உள்ளது. அனைத்துலக விண்வெளி நிலையம் இல்லையெனில் இந்த ஆய்வுகளை ஆளில்லா விண்கலங்கள் மூலமே செய்திருக்க முடியும். அதற்கு செலவு அதிகமாவதுடன் மனிதர்களால் அருகில் இருந்து கண்காணிக்க இயலாது. ஒவ்வொரு ஆய்வுக்கும் வெவ்வேறு வானூர்திகளையும் விண்வெளி வீரர்களையும் அனுப்பும் முறையை இது மாற்றியுள்ளது. அறிஞர்கள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தே ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேவைப்படும் மாற்றங்களையும் இங்கிருந்தே செய்வதற்கு அனைத்துலக விண்வெளி நிலையம் வாய்ப்பளிக்கிறது. இங்கு செய்யப்படும் ஆய்வுகள் பொதுவாக விண்-உயிரியல், வானியல், வான்-மருந்தியல் மற்றும் உயிர்-அறிவியலை சார்ந்தே இருக்கின்றன.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த மனிதர்கள், வெற்றிகரமாக இந்த அனைத்துலக விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளிஓடப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமையன்று விண்வெளிக்கு கிளம்பினர்.

டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோர் முதல் முறையாக தனியார் விண்கலத்தில் பயணித்தது மட்டுமின்றி, அவர்கள் நாசாவுக்கான புதிய வணிக மாதிரியையும் தொடங்கி வைத்துள்ளனர்.

கசிவு, அழுத்தம் மற்றும் வெப்பநிலை சோதனைகளுக்கு பிறகு, இந்த விண்வெளி ஓடம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அதில் பயணித்த டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே இருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க குழுவினர் வரவேற்றனர்.

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று கிளம்பிய பால்கன்-9 ஏவூர்தி, 19 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம், பெரும்பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போன்று பல்வேறு தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா நம்பிக்கை தெரிவிக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.