Show all

பொதுமுடக்கத்திற்கு முழுக்கு! 16,ஆனி (ஜூன் 30) வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிபந்தனை முடக்கத்தில் சில நிபந்தனைகளுடன் பேருந்துகளுக்குத் தளர்வு

16,ஆனி (ஜூன் 30) வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிபந்தனை முடக்கத்தில், சில நிபந்தனைகளுடன் கடந்த 65 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் தமிழகத்தில் இன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த 65 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் தமிழகத்தில் இன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. 

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு நாளது 16,ஆனி (ஜூன் 30) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் கிட்டத்தட்ட அனைத்தும் இயங்கும் வகையில் நடுவண் அரசு தளர்வுகளை அளித்துள்ளது. அதே வேளையில் இந்தத் தளர்வுகளை மாநில அரசுகள் தங்கள் சூழலுக்கு ஏற்றபடி தளர்த்துவதோ கட்டுப்பாடுகளை இறுக்குவதோ செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது. 

தமிழகத்திலும், 16,ஆனி (ஜூன் 30) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிதாக எந்தத் தளர்வுகளும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இன்று முதல் பேருந்து மற்றும் தொடர்வண்டி போக்குவரத்து தொடங்கியது. 

பேருந்து போக்குவரத்திற்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. இந்த 8 மண்டலங்களுக்குள் பயணம் செய்யும் பயணிகள் சிறப்பு அனுமதி எதையும் பெற தேவையில்லை. அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி இல்லை. 

மண்டலம் 1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் மண்டலம் 2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி 
மண்டலம் 3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மண்டலம் 4- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை 
மண்டலம் 5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் 
மண்டலம் 6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி 
மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு 
மண்டலம் 8- சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி 

மண்டலம் 7-இல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைகாவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 விழுக்காட்டு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். 

மண்டலம் 7, மண்டலம் 8-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. 

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு மின்அனுமதி தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் மின்அனுமதி கட்டாயமில்லை. 

அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது. 

அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு மின்அனுமதி தேவையில்லை. வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவும் மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் மின்அனுமதி முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். பேருந்தில் முகக் கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளுக்கு கிருமிக்கொல்லி கொடுக்கப்படுகிறது. பேருந்துகளிலும் கிருமிக்கொல்லி தெளிக்கப்படுகிறது. சமூக இடைவெளி பின்பற்றும்படி இருக்கைகளில் அமர வைக்கப்படுகிறார்கள். பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பயணிகள் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இவ்வளவு வளர்ந்த நிலையில், நிபந்தனை முடக்கத்தை முன்னெடுக்கிற அரசுகள், கொரோனா பரவலின் தொடக்கத்தில்- பொது முடக்கம் அறிவித்து, தேவையேயில்லாமல், இண்டு இடுக்கெல்லாம் முடக்கம் என்பதாக, பைக்கில் சென்றவர்களையெல்லாம் தோப்புக்கரணம் போட வைத்து, மக்களின் பொருளாதாரத்தை முடக்கியது இந்திய வரலாற்றில் நீங்காத வடுவாக நிலைத்திருக்கும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.