அம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா! இந்தியாவின் தரஅடையாள மதிப்புப் பட்டியலில் ரிலையன்ஸ் முதலாவதாக வேண்டும் என்றால், அடுத்த சில ஆண்டுகளில் சாத்தியமா எனக் கேட்டால், சிரமம் தான் என்கின்றனர் துறைசார்ந்த வல்லுனர்கள். 19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உலகின் முதல் 500 தரஅடையாளங்கள் தொடங்கி இந்தியாவின் முதல் 100 தரஅடையாளங்கள் வரை பல பட்டியல்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் சில்லறை வணிகம் தொடங்கி, ஆட்டோமொபைல், மென்பொருள், உணவு, இரும்பு, கட்டுமானம், உணவகம் என பல வணிகங்களைச் செய்து வரும் குழுமம் தான் டாடா. டாடா தரஅடையாளமே இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள முதலாவதாகும். உலகின் முதல் 100 தரஅடையாளங்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் ஒரே இந்திய தரஅடையாள நிறுவனம் டாடா மட்டும் தான். டாடா குழுமத்தின் தரஅடையாள மதிப்பு 20 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறதாம். ஒரு இந்திய தரஅடையாளத்தின் மதிப்பு 20 பில்லியன் டாலரைத் தொடுவது இதுவே முதல் முறையாம். அரசு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள 2வது தரஅடையாளமாக இடம் பிடித்து இருக்கிறது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன தரஅடையாளத்தின் மதிப்பு 7.3 பில்லியன் டாலரில் இருந்து 8.1 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. ரிலையன்ஸ் வெறும் 0.2 பில்லியன் டாலர் பின் தங்கி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு கச்சா எண்ணெய் நிறுவனமாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறி, இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. அண்மையில் ஜியோமார்ட் வழியாக சில்லறை வணிகத்தையும் வளைக்க வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார் அம்பானி. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தரஅடையாளத்தின் மதிப்பு 6.3 பில்லியன் டாலரில் இருந்து 7.9 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறதாம். அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதோடு, இந்தியாவின் முதல் 10 தரஅடையாளங்;களில், ஒரே ஆண்டில் 25 விழுக்காட்டுக்கு மேல் தரஅடையாளத்தின் மதிப்பு அதிகரித்த நிறுவனங்களில், அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் உண்டாம். ஆனாலும் இந்தியாவின் தரஅடையாள மதிப்புப் பட்டியலிலும் ரிலையன்ஸ் முதலாவதாக வேண்டும் என்றால், அடுத்த சில ஆண்டுகளில் சாத்தியமா எனக் கேட்டால், சிரமம் தான் என்கின்றனர் துறைசார்ந்த வல்லுனர்கள். காரணம் டாடா 20 பில்லியன் டாலரில் எளிதில் தொட முடியாத தூரத்தில் இருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் 7.9 பில்லியன் டாலரில் தான் இருக்கிறது. என்கின்றனர். மற்ற இடங்களில்:- 4-வது இடத்தில் இன்ஃபோசிஸ் 5-வது இடத்தில் எஸ்பிஐ 6-வது இடத்தில் ஹெச் டி எப் சி வங்கி 7-வது இடத்தில் மஹிந்திரா 8-வது இடத்தில் இந்தியன் ஆயில் 9-வது இடத்தில் ஹெச் சி எல் 10-வது இடத்தில் ஏர்டெல் என நிறுவனங்கள் பட்டியல் தொடர்கிறது. தலைமை அமைச்சரின் கொரோனா நிதிக்கு 1500 கோடியை அள்ளிக் கொடுத்த வள்ளாண்மை நிறுவனம்தாம் இந்த டாடா. ஆனால் அது மக்களுக்குப் பயன்படாமல் கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது என்பது மக்கள் அங்கலாய்க்கும் சோகம். கொரோனாவில் கடும்பாடாற்றி வருகிற மாநிலங்கள் நிதிக்கு பகிர்ந்து கொடுத்திருக்கலாம் டாடா என்று, மக்கள் டாடாவின் வீணடிப்பை திறனாய்வு செய்கின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



