இந்தியா 45 புள்ளிகளுடன் 77வது இடத்தில் உள்ளது. லஞ்சம் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளே முதன்மையில் உள்ளன. அந்த நாடுகள் குறித்து சில பல சிறப்புத் தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம். 06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உலக அளவில் இலஞ்சம் வாங்காத நாடுகள் பட்டியலில் இந்தியா 77வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க லஞ்ச ஒழிப்பு அமைப்பு உலகளாவிய கள ஆய்வில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு இலஞ்ச ஒழிப்பு அமைப்பு- 1.அரசுடன் தொழில் தொடர்புகள் 2.லஞ்ச ஒழிப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல், 3.அரசு மற்றும் குடிமைச் சேவை வெளிப்படைத்தன்மை, 4.ஊடகங்களின் சமூக மேற்பார்வை திறன் ஆகிய நான்கு காரணிகளின் அடிப்படையில் மொத்தம் 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டு பட்டியலிட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான பட்டியலில் வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தெற்குசூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகிய நாடுகள் தொழில் அடிப்படையிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளன. இந்தியா 45 புள்ளிகளுடன் 77வது இடத்தில் உள்ளது. லஞ்சம் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளே முதன்மையில் உள்ளன. டென்மார்க்: டென்மார்க்கின் பரப்பளவு 43,094 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். டென்மார்க் நாடானது ஜட்லாந்து உள்ளிட்ட 407 தீவுகளை கொண்ட தீவுக்கூட்டம் ஆகும். ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர். டென்மார்க் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. வருவாய் ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடம் என்கிற பட்டியலில் டென்மார்க் இடம் பெறுகிறது. இந்தப் பட்டியல், மக்களின் வாழ்க்கைத்தரம், நலங்கு, மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90விழுக்காடு டென்மார்க் மக்கள் டானியர்களாவர். நோர்வே: இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி நடக்கிறது. நாட்டின் அரசர், ஐந்தாவது எரல்ட் என்பவர் ஆவார். நார்வேயின் தலைமை அமைச்சர் ஜென்ஸ் ஸ்தோல்த்தன்பர்க் என்பவர். நாட்டின் பரப்பு 3,85,207 ச.கிமீட்டர்கள் ஆகும். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 53,67,580 மட்டுமே. இந்த சிறிய நாட்டில் மூன்று மொழிகள் அட்சி மொழிகளாக இருக்கின்றன. அவை, நோர்வே மொழி, பூக்மோல் மொழி, மற்றும் நீநொர்ஸ்க் மொழிகளாகும். மேலும் 6 நகரங்களில் சாமி மொழியும் ஒரு நகரத்தில் பின்லாந்து மொழியும் இணை-ஆட்சி மொழிகளாகும். நோர்வே அகலம் குறைந்த நீளமான வடிவத்தையுடைய நாடாகும். நோர்வேயின் நீளமான கரையோரப் பகுதிகள் வட அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கியதாய் இருப்பதுடன், புகழ்பெற்ற கடல்நீரேரிகளையும் கொண்டுள்ளது. நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள யான் மாயன் தீவானது, நோர்வேயின் முதன்மையான நிலப்பரப்பின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன், ஐஸ்லாந்து கடலை நோக்கி அமைந்த எல்லையைக் கொண்டுள்ளது. நோர்வே மிக அதிகளவில் கடல்நீரேரிகளையும், மலைகளையும் கொண்டுள்ளது. நாட்டின் மொத்தப்பரப்பில் ஐந்தில் மூன்று பங்கு மலைகளால் ஆனது. மிக நீண்ட கடற்கரை கொண்ட நாடாகவும் இது விளங்குகின்றது. நாட்டின் மொத்தப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு காடுகளாகும். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட நீர்வளம் நிறைந்த நாடாகும். இதனை விட இயற்கை வாயு, உருக்கு, செம்பு, துத்தநாகம், நிலக்கரி மற்றும் வடகடலிலிருந்து இருந்து பெறப்படும் பெற்றோலியம் என்பன வளங்களாகும். சவுதி அரேபியா மற்றும் இரசியாவிற்கு அடுத்த படியாக அதிக பாறை எண்ணெய் பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடாகும். இலங்கையில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் போர் நிறுத்தம் ஏற்பட அமைதிக் கலந்துரையாடல் நடந்த போது நார்வே அதில் நடுவராகப் பணியாற்றியது. ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போன்று நோர்வேயிலும் கால்பந்து மிகவும் பேரறிமுகமானது. இதை விட பனிக்கால விளையாட்டுக்களும் இங்கு பேரறிமுகமானவை. நோர்வே நள்ளிரவுச் சூரியன் உதிக்கும் நாடு என்ற சிறப்பிற்குரியது. மனித வளர்ச்சிச் சுட்டெண் கொண்டு நோக்கும்போது, பல ஆண்டுகளாக முன்னணியில் இருக்கும் நாடாகும். சுவீடன்: சுவீடன் நாடு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி நாடாகும். இந்நாட்டின் ஆட்சி மொழி ஸ்வீடிஷ் மொழி ஆகும். நாட்டின் மொத்த நிலப்பரப்பு 4,49,964 சதுரகிமீ நாட்டின் மக்கள்தொகை 15இலட்சத்திற்கு குறைவே. ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நார்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு ஆகும். சுவீடன் நாடு, தெற்கில் ஐரோப்பாவையும், நீண்ட கடற்பரப்பு கொண்ட கிழக்கில் பால்திக் கடலையும், மேற்கில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள ஸ்காண்டிநேவிய மலைத்தொடரானது, சுவீடனையும் நார்வேயையும் பிரிக்கின்றது. பின்லாந்தானது, நாட்டின் வடகிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, போலாந்து, இரசியா, லுதியானா, லாத்வியா, எஸ்தானியா ஆகிய நாடுகள், சுவீடனின் அண்டை நாடுகளாகும். ஒரிசன்ட் பாலத்தின் மூலம், டென்மார்க்குடன் இணைந்துள்ளது. ஐரோப்பாவின் மிக நீண்ட எல்லையை சுவீடன் கொண்டுள்ளது சுவீடன் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - ரிஸ்க்ஸ்டேக். 349 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அவையே, நாட்டின் தலைமைஅமைச்சரைத் தேர்வு செய்கின்றது. பாராளுமன்றத் தேர்தல், நான்காண்டிற்கு ஒருமுறை செப்டம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறன்று நடக்கிறது. காரல் 16ம் மன்னர் குஸ்தாப் என்பவர் சுவீடன் நாட்டு அரசர் ஆவார். நியூசிலாந்து: நியூசிலாந்து நாடு நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியல் முடியாட்சி நாடாகும். இந்நாட்டில் வாழ்வோரில் 74விழுக்காட்டினர் ஐரோப்பியர் ஆவர். 14.9 விழுக்காட்டினர் மாவோரி இனத்தைத் சேர்ந்தவர்கள். தமிழர்கள் உள்ளடங்கிய 11.8விழுக்காட்டினர் ஆசியர்கள் ஆவர். 7.4விழுக்காட்டினர் பசிபிக் மக்கள். 1.2விழுக்காட்டினர் மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கர் 1.7விழுக்காட்டினர் ஏனையோர் என்பதாக பட்டியல் இடப்படுகிறது. அரசியார், இரண்டாம் எலிசபெத். தலைமை ஆளுநர் பாட்ஸி ரெட்டி. தலைமைஅமைச்சர் ஜசிந்தா ஆர்டெர்ன். நாட்டின் மொத்த நிலப்பரப்பு, 2,68,680 சதுரகிமீ. நாட்டின் மக்கள் தொகை ஐம்பது இலட்சத்திற்கும் குறைவே. நியூசிலாந்து பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முதன்மையான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பொலினீசியர்கள் நியூசிலாந்தில் குடியேறி தனித்துவமான மாவோரி கலாசாரத்தைப் பேணி வந்தனர். 378 ஆண்டுகளுக்கு முன்பு ஏபெல் டாஸ்மான் என்ற டச்சு நாடுகாண் பயணியே முதன் முதலாக நியூசிலாந்தைக் கண்ட ஐரோப்பியர் ஆவார். 180 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானிய அரசும் மவோரியரும் வைத்தாங்கு உடன்பாட்டை ஏற்படுத்தி சியூசிலாந்தை பிரித்தானியக் குடியேற்ற நாடாக்கினர். இன்றுள்ள ஐம்பது இலட்சத்திற்கும் குறைவான மக்களில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய குடிவழியினர் ஆவர். தாயக மாவோரி இனத்தவர் மிகப்பெரிய சிறுபான்மையினர். இவர்களுக்கு அடுத்ததாக ஆசியரும், பசிபிக் தீவு மக்களும் வாழ்கின்றனர். இதனால் நியூசிலாந்தின் கலாச்சாரம் முக்கியமாக மாவோரி மற்றும் தொடக்க கால ஐரோப்பிய கலாசாரங்களை மையப்படுத்தி உள்ளது. அண்மைக் காலத்தில் உலகின் வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடியேற்றம் தொடங்கியதில் இருந்து பல்கலாச்சாரம் பரவி வருகிறது. ஐக்கிய நாடுகளின் அரசி இரண்டாம் எலிசபெத்தே நியூசிலாந்தின் நாட்டுத் தலைவராக உள்ளார். இவரது சார்பில் ஆளுநர் ஒருவர் நியூசிலாந்தில் உள்ளார். அரசிக்கு நடைமுறையில் எவ்வித அரசியல் அதிகாரமும் கிடையாது. நாட்டின் அரசியல் அதிகாரம் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் ஓரவையைக் கொண்ட நாடாளுமன்றத்திடமே ஆட்சி உள்ளது. இதன் தலைவரான தலைமை அமைச்சரே அரசின் தலைவராக உள்ளார். திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நியூசிலாந்தின் பொருளாதாரம் உலகில் கூடிய அளவு கட்டற்ற சந்தை முறையைக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரங்களில் ஒன்று. நாடாளுமன்றத்தை விட நியூசிலாந்தில் 78 உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளன. அத்துடன் நியூசிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சார்பு மண்டலம், குக் தீவுகள் மற்றும் சுயாட்சி அமைப்புடைய மாநிலங்கள் ஆகியனவும், அன்டார்க்டிக்காவில் உள்ள ரொஸ் சார்பு மண்டலமும் உள்ளன. நியூசிலாந்து ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், அன்சஸ், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, பசிபிக் தீவுகளின் ஒன்றியம், ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது. நியூசிலாந்தில் அறங்கூற்றுவர்களும் அறங்கூற்றுமன்ற அலுவலர்களும் அரசியல் சார்பற்று கட்டமைக்கப்பட்ட விதிகளின்படி நியமிக்கப்படுகின்றனர்; இவர்கள் அரசியல் அமைப்பின்படி அரசிடமிருந்து முழுமையான விடுதலை பெற்று தன்னாட்சி அமைப்பினராவர். இதனால் அறங்கூற்றுமன்றங்கள் சட்டத்தை மற்றவர்களின் தாக்கமின்றி இயல்பாக முன்னெடுக்கின்றன. நியூசிலாந்து உலகின் மிகவும் நிலைத்தத்தன்மை உடைய மற்றும் நன்கு அரசாளப்படும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகின்றது. நாட்டின் மக்களாட்சி அமைப்புக்களின் வலிமை கொண்டு தரபடுத்திய பட்டியலில் நியூசிலாந்து ஐந்தாவதாக உள்ளது. அரசின் தெளிவுத்தன்மை மற்றும் ஊழலற்ற ஆட்சிக்கு முதலாவதாக உள்ளது. அண்மைய தேர்தல்களில் வாக்காளர் பங்களிப்பு 79விழுக்காடாக உள்ளது. நியூசிலாந்து பன்னாட்டு வணிகத்தை மிகவும் நம்பியுள்ளது. குறிப்பாக அதன் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை சார்ந்துள்ளது. தேசிய உற்பத்தியில் 24விழுக்காடு ஏற்றுமதியால் கிட்டுகின்றது. இதனால் பன்னாட்டு பொருட்சந்தை மற்றும் விலை மாற்றங்களும் உலகளாவிய பொருளியல் பின்னடைவுகளும் நியூசிலாந்தை பெரிதும் பாதிக்கின்றன. நியூசிலாந்தின் ஏற்றுமதிப் பொருட்களில் வேளாண்மை, தோட்டப்பயிர், மீன்பிடித் தொழில், வனத்துறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவை பாதிக்கும் மேலாக பங்கேற்கின்றன. ஏற்றுமதியில் ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான், சீனா முதன்மைப் பங்கேற்கின்றன. பொருளியலில் சேவைத்துறை முதன்மை வகிக்கின்றது. தயாரிப்பு, கட்டமைப்பு, வேளாண்ண்மை, கனிமத்துறை அடுத்தநிலைகளில் உள்ளன. சுற்றுலாத்துறை நியூசிலாந்தின் மொத்த பணிவாய்ப்புகளில் 9.6 விழுக்காடாக உள்ளது. பால்பொருட்களின் ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 21 விழுக்காடாக உள்ளது. திராட்சைத்தோட்டங்களும் மது உற்பத்தியும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன. நியூசிலாந்தின் ஆற்றல் தேவையில் 69விழுக்காடு எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி மூலமாகப் பெறப்பட்டது. மீதம் நீர் மின் ஆற்றல் புவிவெப்ப மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைக் கொண்டு பெறப்பட்டது. நியூசிலாந்தில் ஆறு பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



