வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்- டிரம்ப் உடனான சந்திப்பு ஏற்பாடு, தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளதாக தென் கொரியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது! இந்தச் செய்தி உண்மையா? பொய்யா? குழப்பம் சார்ந்த அதிர்ச்சியில் உலகம். 18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வியடைந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கான சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றியதாக தென்கொரியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன், கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு மிகவும் இணக்கமாக நடை பெற்றதால் இருநாட்டு உறவில் நீடித்த விரிசல் விலகியது. இதையடுத்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு அமைதி பாதைக்கு திரும்பியது. இந்த நிலையில் கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் இந்த சந்திப்பு முதல் சந்திப்பை போல இணக்கமாக நடைபெறவில்லை. கிம் ஜாங் அன்னின் கோரிக்கையை ஏற்க மறுத்து, டிரம்ப் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது கிம் ஜாங் அன்னுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்த சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நால்வர் மீதும் நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து அங்குள்ள ஒரு விமான நிலையத்தில் வைத்து, 5 பேரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தென்கொரியா இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தென் கெரியா அமெரிக்க தத்துப் பிள்ளையாகவும், வடகொரிய இரஷ்யாவின் தத்துப் பிள்ளையாகவும் வளரவேண்டியதாகியது. இதன் காரணமாக ஒன்றையொன்று சாட்டிக் கொள்ளும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்காது. அந்த மாதிரியானது தான் வடகொரியா மீதான தென் கொரியாவின் குற்றச்சாட்டு. உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,170.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.