Show all

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீன உறவு பாதிப்படைந்துள்ளது

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவு மிக கடினமான காலகட்டத்தில் இருப்பதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்

25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவு மிக கடினமான காலகட்டத்தில் இருக்கிறது. அதிலும் இந்த ஆண்டு பெரிய அளவில் உறவு சீர்குலைந்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதியை பேணுவதுதான் மற்ற துறைகளில் உறவு வளர்வதற்கு அடிப்படையாக அமையும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. எல்லையில் இதே நிலைமை நீடிப்பதை அனுமதிக்க முடியாது.

பல ஆண்டுகளாக சீன உறவில் சிக்கல்கள் இருந்தாலும், வணிகம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் உறவு வளர்ந்து வந்தது. எல்லையில் அமைதியைப் பேண ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

எல்லை பகுதிகளில் இருதரப்பும் பெருமளவு படைகளைக் குவிக்கக்கூடாது என்று 27 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. ஆனால், பல்லாயிரக்கணக்கான சீன துருப்புகளை முழு ராணுவ தயார்நிலையுடன் லடாக்கில் உள்ள எல்லை கோடு பகுதியில் சீனா குவித்துள்ளது.

இதற்கு சீனா 5 முரண்பட்ட விளக்கங்களை அளித்துள்ளது. இது, ஒப்பந்தங்களை மீறிய செயல். இதனால் இயல்பாகவே உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். அந்நிகழ்வு, நமது மனநிலையை முற்றிலும் மாற்றி விட்டது. இந்த உறவை சரி செய்வது மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.