Show all

சின்னத்திரையில் இத்தனை உயிரிழப்புச் சோகங்களா! சித்ரா உயிரிழப்பு இறுதியாக இருக்கட்டும்

இத்தனை உயிரிழப்புச் சோகங்களா சின்னத்திரையில்? சபர்ணா முதல் சித்ரா வரை தொடரும் சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலைப் பட்டியல், நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சின்னத்திரையில் இதுவரை நிறைய நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், சபர்ணா முதல் சித்ரா வரை தொடரும் சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலைப் பட்டியல், நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் மரணம் பேரறிமுகத்தின் அளவிற்காய் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மட்டுமின்றி சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்த பல நடிகர், நடிகைகள் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர். 

சித்தி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடர் வண்டிமுன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் சிக்கல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

வம்சம், தென்றல் உள்ளிட்ட தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர் வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் தொலைக்காட்சித் தொடர் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த சோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு தொடர்களில் நடித்துவந்த மயூரி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாததால் சாவதாக எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஹிந்தி மொழிமாற்றத் தொடரான மண் வாசனையில் நடித்தவர் பிரதியுசா. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான தொடர்களிலும் நடித்து வந்த நிலையில், பத்து மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.

சொந்த பந்தம் தொலைக்காட்சித் தொடர் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மிகப்பேரறிமுகமான, பெரும்பாலான மக்களின் அன்புக்கு பாத்திரமான, சித்ரா நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்றும் இல்லையில்லை அதற்கு வாய்ப்பு இல்லை என்றவாறான விவாதப் பொருளுக்கு வித்திட்டு சோகம் மீட்டிச் சென்றிருக்கிறார்.

இவ்வாறு தொடர்ந்துதொலைக்காட்சி நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சோகநிகழ்வு சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.