Show all

இந்தியாவின் முடிவை தாங்கள் நிராகரிப்பதாக, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை! 35அ, 370 ரத்து.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 35அ, 370 ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசின் இன்றைய இந்த அறிவிப்பிற்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாகவும் மேலும், இந்தியாவின் முடிவை தாங்கள் நிராகரிப்பதாகவும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 35அ, 370 ரத்து செய்யப்படுவதாக நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசின் இன்றைய இந்த அறிவிப்பிற்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாகவும் மேலும், இந்தியாவின் முடிவை தாங்கள் நிராகரிப்பதாகவும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனாலும் அந்த அறிக்கையில் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

ஜம்மு காஷ்மீர், இந்தியா ஆக்கிரமித்துள்ள பகுதி என்றும், சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  அவ்வாறு குறிப்பிடும் போது மாமன்னர் ஹரிசிங் ஜம்மு காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைத்து ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு தகுதி பெற்றதை அங்கீகரிக்காததாகிறது.

ஆனால் ஐநா பாதுகாப்பு அவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜம்மு காஷ்மீரின் தகுதியை இந்தியாவால் மாற்ற முடியாது. என்றும் தெரிவிக்கிறது. இப்படி தெரிவிக்கும் போது, மாமன்னர் ஹரிசிங் ஜம்மு காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைத்து ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு தகுதி பெற்றதை அங்கீகரித்து வக்காலத்து வாங்குவது ஆகிறது.

மேற்கண்ட நிலைபாடு கொண்ட பாகிஸ்தான், கீழ்கண்ட நிலைபாட்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதிக்காக வக்காலத்து வாங்க முடியாது. ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதிக்காக போராடுவதற்கு ஜம்மு காஷ்மீரின் மக்களுக்கும் ஜம்மு காஷ்மீரின் தலைவர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு.

மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கையில்,  ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, “இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. இது அந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவோடு இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவர பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான் கான் முயற்சித்தார். ஆனால், இன்று இந்த முடிவை எடுத்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது இந்தியா.

இந்த நேரத்தில் காஷ்மீர் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது. நாங்கள் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் மற்ற விதங்களிலும் ஆதரவு தெரிவிப்போம். சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பாகிஸ்தான் ஊடகமான துனியா செய்திக்கு தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியை நீக்கியதை தொடர்ந்து, பாகிஸ்தானில் நாளை கூட்டு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முசபராபாத்தில் போராட்டமும் நடைபெற்றது.

பாகிஸ்தான் முன்னெடுக்கும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான ஆதரவு, தன்னலம் சார்ந்ததாகவே கருதப்படும் என்கிற நிலையில், பாஜக இதை பெரிதாகப் பொருட்படுத்தாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,235.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.