கூகுள்பே செயலி இந்தியாவில் தொடரலாமா என்கிற வழக்கு டில்லி உயர் அறங்கூற்று மன்றத்தில் பதியப்பட்டுள்ளது. இதற்கு கூகுள் பே தரப்பும், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியும், கூகுள்பே செயலி இந்தியாவில் தொடரலாம் என்ற வகைக்கு நேர்மறையான பதிலை வழங்கியுள்ளன. 11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் பண பரிமாற்றச் செயலிகளில் கூகுள்பே இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் செயலியாக வளர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக தொழில்நகரங்களில் பெட்டிக் கடையில் தொடங்கி சிறப்பு அங்காடிகள் வரை கூகுள்பே வருடி அட்டை வைக்கப்பட்டிருக்கும். ரூ.5-க்கு பொருள் வாங்கி கடைக்காரரிடம் காசு கொடுப்பதற்கு பதிலாக செல்பேசியைக் காண்பிக்கும் பழக்கம் சென்னை பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ளன என்பதை அனைவரும் அறிவோம். பெரும்பாலானவர்களிடம் மிடுக்குப் பேசி உள்ள நிலையில், கூகுள் பே போன்ற பணபரிமாற்றச் செயலிகள் அனைவரிடமும் அதிகரித்து வரும் காரணத்தால் பணம் வழங்கும் இயந்திரம், வங்கி போன்றவற்றை தேடவோ கையில் பணம் வைத்திருக்க வேண்டிய தேவையோ இல்லாத நிலை வளர்ந்து வருகிறது. அதுவும் தற்போதைய கொரோனா தொற்று பரவல் காலத்தில் பணம் வழங்கும் இயந்திரம், வங்கி போன்றவற்றின் மூலம், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் இயங்கலை பணப்பரிமாற்றச் செயலிகள் ஆதிக்கம் பெற்றுள்ளன. இந்த நிலையில்- கூகுள் பே செயலி இந்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்படவில்லை, இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி அனுமதி பெறவில்லை, கூகுள் பே பயனர்களின் ஆதார், வணகவரி அடையாள அட்டை, வங்கி விவரம் போன்ற தனிநபர் விவரங்களை எளிதாக கூகுள் பே செயலி அறிந்து கொள்ள முடிவதால்- பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டின் இந்தியக் கட்டுப்hட்டு வங்கி அங்கீகரிப்பு தகுதி பட்டியலில் கூகுள்பே இடம்பெறவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அனுமதி வாங்காமல், கூகுள் பே தனது சேவையை எவ்வாறு இந்தியாவில் செயல்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியது. இதுகுறித்து உடனடியாக பதிகை செய்யும்படி இந்தியக் கட்டுப்பாட்டு வங்கிக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை அனுப்பியது. கூகுள் பே ஒரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டு செயலிதான் என டெல்லி உயர் அறங்கூற்றுமன்றத்தில் இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி பதிலளித்துள்ளது. எனவே, அதன் செயல்பாடுகள் தமிழ்த்தொடராண்டு-5119 (2007) இன் கடன் மற்றும் தீர்வு முறை சட்டத்தை மீறவில்லை என இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் பே தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூகுள் பே தங்களது செயலியுடன் இணங்கி ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் வங்கிகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையில் மட்டும் உதவுகிறது. தொழில்நுட்ப உதவி மேற்கொள்ள அனுமதி வாங்கத் தேவையில்லை எனவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ) வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு இயக்கிகள் பட்டியலில் அது இடம் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கூகுள் பே பயனர்களின் தரவுகளை
கூகுள் பே அறிந்து கொள்ள முடிகிறது என்பது தொடர்பான கேள்விகளுக்கு கூகுள்பே பதிலளிக்கவில்லை. தனிநபர் தரவு என்பது அவர்களின் அடிப்படையாக பார்க்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் தகவல் களவாடப் படுவதற்கான வாய்ப்பு என்பது மிகப் பெரிய சுழியம் பிரிவு அறைகூவலாக இருந்து வருகிறது. என்கிற நிலையில் இந்த வழக்கு விரிவான விசாரணைக்காக மேலும் 27 நாட்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



