வரலாற்றுச் சாதனை! கொரோனாவிற்கு தடுப்பு மருந்தா என்று விழியுயர்த்த வேண்டாம். நடுவண் பாஜக ஆட்சியில் எப்படியான சாதனை நிகழ்த்தப்படும் என்று பணமதிப்பிழப்பு, சரக்குசேவை வரி என்று பல அனுபவங்கள் இருக்கிறது அல்லவா நமக்கு. அதே போன்ற ஒரு சாதனைதான் இதுவும். இந்திய வரலாறு காணாத செய்தியாக பெட்ரோல் விலையை முந்தியது டீசல் விலை என்பதுதான் அந்தச் சாதனை. 11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் தொடர்ந்து 18 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், நேற்று டீசல் விலை மட்டும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் டீசல் விலையானது தொடர்ந்து 18-வது நாள் உயர்வைப் பெற்றது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் 79.88 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 79.76 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை உயர்ந்ததான வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 18 நாட்கள் தொடர் விலையேற்றத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 9.41 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் சுமார் 9.58 ரூபாய் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையைவிட டீசல் அதிக விலைக்கு விற்கப்படுவது இந்திய வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். டீசல்- கனவகை ஊர்திகளுக்கு எரிபொருளாகப் பயன்படுவதால் அதை விலையேற்றினால் இந்தியாவில் அனைத்து விலைகளும் கூடிவிடும் என்பதாக பொட்ரோல் விலைக்கும் டீசல் விலைக்கும் நல்;;லதொரு வேறுபாடு கடைபிடிக்கப்பட்டே வந்தது. கனவகை ஊர்திகளுக்கு மட்டுந்தாம் இந்தச் சலுகையா? நாங்களும் அனுபவிக்கிறோம் என்று- காரில் இருந்து புல்லட் வரை டீசலுக்கு மாற்றப்பட்ட காலம் உண்டு. பெட்ரோலில் இயங்குவதை விட டீசலில் இயங்கும் போது ஊர்திகளின் இயக்கம் கொஞ்சம் கடுகடுப்பாக இருக்கும். ஏனென்றால் டீசல் பெட்ரோலை விட எளிதில் பற்றக்கூடிய எரிபொருள் அல்ல. அதை வெப்பப்பாட்டிற்கு உட்படுத்தி சூடான டீசலைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் அதனால் அந்த வகை ஊர்திகளுக்கு எஞ்சினில் சிறப்பான வடிவமைப்பு உண்டு. இந்தச் சிக்கலான வடிவமைப்பு, கடுகடுப்பான இயக்கம் எல்லாம் தாண்டியும் பெரும்பாலானவர்கள் டீசல் காரையே விரும்புவார்கள். காரணம் டீசல் விலைகுறைவு. அதனால் சிக்கன நடவடிக்கையாக டீசல் கார்கள் நிறைய தயாரிக்கப்பட்டன. ஏன் டீசலில் புல்லட்கூட தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தது. அந்த வண்டிகள் பார்ப்பதற்கு இன்னும் பேரளவாகத் தெரியும். டீசல் புல்லட் உடலுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுக்கிற காரணம் பற்றி இருசக்கர வண்டிக்கு டீசல் தோதுப்பட வில்லை. இத்தனை வரலாறுகளையும் முறியடித்து கனவகை ஊர்திகளுக்கான எரிபொருள் விலை குறைவாக இருக்க வேண்டும். அப்போது நாட்டின் விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்கிற அடிப்படை விதிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்ட பாஜக, இந்திய வரலாறு காணாத வகையில் டீசலை விலையுயர்ததியுள்ளது. அதுதான் பாஜகவிற்கே உரிய தனித்துவமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



