22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பன்னாட்டு பெண் குழந்தைகள் நாளை முன்னிட்டு பின்லாந்து தலைமைஅமைச்சர் சன்னா மரின் தனது பதவியில் 16 அகவை சிறுமியான ஆவா முர்டோ என்பவரை அமரவைத்தார். உலகின் மிக இளம் அகவை தலைமைஅமைச்சர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான, பின்லாந்து நாட்டின் தலைமைஅமைச்சர் சன்னா மரின். அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பன்னாட்டு பெண் குழந்தைகள் நாளை முன்னிட்டு பின்லாந்து தலைமைஅமைச்சர் சன்னா மரின் தனது பதவியில் 16 அகவை சிறுமியான ஆவா முர்டோ என்பவரை ஒருநாள் பணியாற்றவைத்தார். ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்துறையில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார். பன்னாட்டு பெண் குழந்தைகள் நாளையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆவா முர்டோ பின்லாந்து நாட்டின் ஒருநாள் தலைமைஅமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெறுமனே ஆறுபது இலட்சம் மக்களின் தாய்மொழியான பின்னிய மொழி, பின்லாந்தின் ஆட்சிமொழியாக கொலுவீற்றிருப்பது பின்னிய மொழிக்கான பெருமையாகும். பின்லாந்து வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ருசியா, சுவீடன், நார்வே, எசுத்தோனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள். ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு ஐக்கிய நாடுகள் அவை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும். பின்லாந்து நாட்டில் சில நூறு தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் பின்லாந்து தமிழர் என்பதாக தமிழ்ப் பின்புலத்துடன் பின்லாந்து நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். பின்னிய மொழியின், கலேவலா உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். கலேவலா தமிழில் உதயணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது. நமது திருக்குறள் பின்னிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



