Show all

ஒன்றிய அரசு அதிகாரிகளின் முறைகேடு! குறைந்த மதிபெண் பெற்ற வடமாநிலத்தவர்களுக்கு வேலை. தமிழ்நாட்டவர் புறக்கணிப்பு

தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசுத்துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை உள்நுழைத்துவிடுகின்றனர். இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன. தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளுக்குத் துணைபோகின்றனர்.

23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டு வேலைகளில் தமிழர்களுக்கு அல்லது தமிழக மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கோரிக்கை வைத்து வரும்நிலையில், உயர் அறங்கூற்றுமன்றமும் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருப்பது தமிழக ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக இருக்கிறது.

பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்? இப்படியொரு கேள்வியை சென்னை உயர்அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்கள் தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்கள்.

உதகை ஆயுதத் தொழிற்சாலையில், வேதியியல் செயலாக்கப் பிரிவில் 140 பணியிடங்களை நிரப்ப ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அந்த ஆறு பேரின் பணி நியமனத்தை இரத்துசெய்யக் கோரியும், தனக்குப் பணி வழங்கக் கோரியும் சரவணன், சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனுபதிகை செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர், அவருக்குப் பணி வழங்க உத்தரவிட்டார். ஆனால், அறங்கூற்றுவரின் ஆணையை இரத்துசெய்யக் கோரி ஆயுதத் தொழிற்சாலை சார்பில் மேல்முறையீட்டு மனு பதிகை செய்யப்பட்டது. இந்த மனு அறங்கூற்றுவர்கள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான ஹிந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் பெறுவது எப்படி? பணித் தேர்வுகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். என்று விசாரணையின் போது அறங்கூற்றுவர்கள் தமிழக அரசை கடிந்து கொண்டனர்.

இந்த வழக்கின் விசாரணையில் ஒன்றிய அரசின் சார்பில் அணியமான வழக்கறிஞர் சுப்பையா, ‘ஆயுதத் தொழிற்சாலை பணியில் 140 பணியிடங்களில் 50 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று கூற, அப்போது உடனடியாகக் குறிக்கிட்ட அறங்கூற்றுவர் என். கிருபாகரன், தமிழ்நாட்டுக்கு என்ன பிச்சை போடுகிறீர்களா? என்று மிகக் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.

வட மாநில இளைஞர்கள், அரசுத் தேர்வுகளில் ஹிந்தியில் தேர்ச்சி இழப்பதும், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவதும் இயல்பாகவே இந்தத் தேர்வு முறைகளிலுள்ள முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. இங்கு இருக்கும் அரசுத்துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை உள்நுழைத்துவிடுகின்றனர். இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன. தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளுக்குத் துணைபோகின்றனர். அஞ்சல்துறை, இந்திய மாநில வங்கித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள்கூட பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.