23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் ஆறு கிழமைகளில் நடுவண் அரசு அமைத்திடுக என்பது உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பு. தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில், நடுவண் அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது பாஜக. நடுவண் அரசின் சட்ட நிறுவனமான உச்சஅறங்கூற்று மன்ற, தீர்ப்பை மதித்து செயல் பட வேண்டியது பாஜக அரசின் கடமை. அப்படி மதிக்காத போது ஆட்சி நடத்தும் தகுதி இழக்கிறது. இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு உட்பட்டு கர்நாடக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறது காங்கிரஸ். காவிரியை மாநிலத்தின் உடைமையாக பாவிப்பது, இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை மதித்து நடுவண் அரசுக்கு வழிவிட மறுப்பது ஆட்சி இழப்பிற்கு உரியதாகும். நடுவண் அரசில் பொறுப்பில் இருக்கிற பாஜகவும், கர்நாடக அரசில் பொறுப்பில் இருக்கிற காங்கிரசும், சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபடுவது தேசத் துரோக குற்றமாகும். இந்தியக் குடிஅரசுத் தலைவர் இரண்டு ஆட்சிகளையும் கலைத்து விட்டு புதியதாக தேர்தல் அறிவித்து ஆட்சி அமைக்கிற அளவிற்கான காரணிகளை நடுவில் பாஜகவும், கர்நாடகாவில் காங்கிரசும் கட்டமைத்துள்ளன. ஆனால், வேடிக்கை நிகழ்வாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் போராட்டம் நிகழ்த்தி, கர்நாடக அரசில் இருக்கிற காங்கிரசுக்கும், நடுவண் அரசில் ஈடுபட்டிருக்கிற பாஜகவிற்கும் பொறுப்பை உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருபக்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத அடிப்படையில், கடமை தவறி விட்ட அரசாகவும், மறுபக்கம் நம்பிக்கையில்லா தீர்மானக் கணைகள் முன் நின்று கொண்டிருக்கிற மக்கள் நம்பிக்கை இழந்த அரசாகவும் நடுவண் பாஜக அரசு நின்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல், தொடர்வண்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில ஊர்களில் போராட்டக்காரர்கள் நடுவண் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரை காமராசர் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்டாலின் உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சிறிது நேரம் கழித்து காவல்துறையினர் விடுவித்தனர். இந்த நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடையை மீறி போராட்டம், போக்குவரத்து இடயூறு ஆகிய பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தமிழகம் முழுவதும், 85000 பேர்கள் கைது செய்து விடுதலை செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குகள் உண்டு. கடமை தவறும் வகையாக, நடுவண், கர்நாடக அரசுகளை முன்னெடுத்துச் செல்லும் பாஜகவையும் காங்கிரசையும் கண்டித்து நடத்தப் படும் போரட்டத்தின் மீது வழக்குகள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,749.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



