Show all

மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது! உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உறுதியான தீர்ப்பு

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரைக் கிளை தீர்ப்பு என்றாலே பழந்தமிழ் மன்னர்கள் தீர்ப்பு போல ஒரு உறுதி தன்மை இருக்கும் என்பதை பல தீர்ப்புகளை ஒப்பிட்டு மக்கள் பாராட்டி வந்திருக்கிறார்கள்.

தற்போது, மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது என உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை ஒரு உறுதியான தீர்ப்பை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மணல் திருட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும் மணல் கொள்ளை பல இடங்களில் மாட்டுவண்டிகள் மூலமாகவும் ட்ராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், பாண்டியராமன் என்பவர் இதுதொடர்பாக உயர்அறங்கூற்று மன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மணல் திருட்டு குறித்து புதிய உத்தரவை உயர்அறங்கூற்று மன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ளது.

அதன்படி மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீண்டும் ஒப்படைக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு சென்னை உயர்அறங்கூற்று மன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

அபாரதம் கட்டினாலும் வாகனங்களை ஒப்படைக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் மாட்டு வண்டியாக இருந்தால் மாடுகளை மட்டும் தான் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மாட்டு வண்டிகளை எதற்காகவும் ஒப்படைக்கக் கூடாது என உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்அறங்கூற்று மன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மணல் திருட்டு மூலம் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உருவாகும் என்றும் உயர்அறங்கூற்று மன்ற மதுரைக் கிளை வேதனை தெரிவத்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,921.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.