பாஜக வேல்யாத்திரைக்கு தடை கோரிய வழக்கும், அனுமதி கோரிய வழக்கும் முடித்து வைக்கப்பட்டதாம். 20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை முதல், பாபர் மசூதி இடிப்புநாள் வரை ஒரு மாதத்திற்கு திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை, தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்திட பாஜக திட்டமிட்டது. இந்த பயண நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், நலங்குத் துறை செயலாளர், தமிழக காவல்துறைத் தலைவர், பாரதிய ஜனதா மாநில கிளைத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையின் போது, பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, உயர்அறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், வேல் யாத்திரை முன்னெடுப்பில் அரசு முடிவு செய்யலாம் என்றும், மேலும் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் மனுதாரர்களுக்கு அறங்கூற்றுவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனராம். இதனைத்தொடர்ந்து தடை கோரிய இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டனவாம். பாஜகவின் இந்தப் பயண நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்தால், நிகழ்ச்சி நடத்த முயல்கிறவர்கள் வழக்கு தொடர முடியும் என்றும், பாஜகவின் இந்தப் பயண நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி அளித்தால், பாஜகவின் பயண நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறவர்கள் வழக்கு தொடர முடியும் என்றும் தெரியவருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



