Show all

பாஜக இன்று முன்னெடுக்கவிருந்த வேல்யாத்திரைக்கு தடை உறுதி! எதிர்த்து அறங்கூற்றுமன்றம் போகாதாம் பாஜக

பாஜக இன்று முன்னெடுக்கவிருந்த வேல்யாத்திரைக்கு தடை உறுதி படுத்தியுள்ளது அதிமுக அரசு. தடையை எதிர்த்து அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீடு செய்வீர்களா என்ற கேள்விக்கு, “மக்கள் மன்றத்தை அணுகுவோம்" என்று முருகன் பதிலளித்தார்.

20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: வீட்டு தெய்வம், குலதெய்வம், எல்லை தெய்வம், ஐந்திணைத் தெய்வம் என்று குடும்பத்தில் பெற்றோர் முதல் நாட்டின் மன்னன் வரையிலான முன்னோர்களுக்கு நடுகல் நட்டு, உற்பத்திகளைப் படையல் இட்டு விழாமல் இருப்பதற்கு விழா கொண்டாடுவது தமிழர் மரபு.

தமிழர் நடுகல்லை லிங்கம் போல இருக்கிறது என்று தொடக்கத்தில் நையாண்டி செய்த ஆரியர்கள், காமசூத்திரம், கொக்கோகம் என்று, தமிழர் தம் ஆகம் ஐந்திணைக்கு புறப்பொருள் விளக்கம் தந்து மகாலிங்கம், புஷ்பலிங்கம், இராமலிங்கம் என்று தெய்வங்களுக்கு ஏராளமான காமக்கதைகளை முன்னெடுத்தார்கள். 

அப்படி அவர்கள் முன்னெடுத்து தமதாக்கிக் கொண்ட தெய்வங்களில் அவர்கள் விட்டுவைத்து, தமிழர் கொண்டாடிய திணைத் தெய்வங்களில் மிச்சம் இருப்பது முருகன் ஒன்;றே. தற்போது, அதன் மீதும் காவிச்சாயம் பூசி தமதாக்கிக் கொள்ளும் நோக்கத்திற்காக சீமான் நடத்தி வந்த வேல் பயணத்தை மணிப்பிரவாள நடையில் வேல்யாத்திரையாக்கி தமிழகத்தில், கொரோனவிற்காக முன்னெடுத்திருக்கும் சமூக இடைவெளியைத் தகர்த்து ஒரு மாதகாலம் தமிழர்களிடம் ஊர் ஊராகச் சென்று மூளைச்சலவை செய்ய திட்டமிட்டனர் பாஜகவினர்.

இந்த நிலையில்தான் விழித்துக் கொண்டது தமிழக அதிமுக அரசு. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காட்டிற்கு சட்டம் போட்ட அதே சூட்டோடு, வேல் யாத்திரைக்கு தடையையும் போட்டது, தமிழர் நலனுக்காய். 

இன்று திருத்தணியில் தொடங்கி, முப்பதாவது நாள் பாபர் மசூதி இடிப்புநாள் வரை அறுபடை வீடுகளுக்கும் பயணித்து  திருச்செந்தூரில் நிறைவுக் கூட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. நாம்தமிழர்கட்சி, விசிக, மதிமுக, திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் அறங்கூற்று மன்றத்திலும் வேல்யாத்திரைக்கு தடைதான் என்றும் முழங்கியது அதிமுக அரசு.

இதனால் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. பாஜகவின் இந்திய அளவிற்கான பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக கிளை பாஜக தலைவர் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “வேல் யாத்திரை அனுமதி கிடைக்காதது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக மங்களூரில் இருந்து இந்திய அளவிற்கான பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி அவசரமாக வந்து கலந்து கொண்டார். தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்குவது என்றும், யாத்திரைக்கு தடை விதித்த அதிமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவித்தனர். வேல் யாத்திரைக்கான தடையை எதிர்த்து அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீடு செய்வீர்களா என்ற கேள்விக்கு, “மக்கள் மன்றத்தை அணுகுவோம்" என்று முருகன் பதிலளித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.