வேல்யாத்திரை என்ற ஒற்றைத் தலைப்பில்- சீமான், விடுதலைச் சிறுத்தைகள், திமுக, என்னும் தமிழக மக்களின் விருப்பத் தேர்வுகளை, மடை மாற்ற முடியும் என்னும் நம்பிக்கை முயற்சிகளுக்கான கனவுத் திட்டமாக தமிழக பாஜக கிளை முயன்று வருகிறது. 20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக நடத்த திட்டமிட்டுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் தெரிவித்துள்ளது. நாளை திருத்தணியில் தொடங்கி அடுத்த மாதம் வருகிற பாபர் மசூதி இடிப்பு நாளான 21,கார்த்திகை (டிசம்பர் 6) வரை திருச்செந்தூரில் நிறைவு விழா கொண்டாடும் வகையில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டது. இந்த திட்டம் குறித்து, முருகனின் அறுபடைவீடு உள்ள நகரங்களுக்கு மட்டுமல்ல பாஜக அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த பெயரில் தனது கருத்துப்பரப்புதலை மேற்கொள்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேல் யாத்திரைக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பாபர் மசூதி இடிப்பு நாளில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், நலங்குத் துறை செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், பாரதிய ஜனதாவின் தமிழகக் கிளையின் தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று தலைமை அறங்கூற்றுவர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் சார்பில் வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், நாளை தொடங்க உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தார். கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை பரவலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் வேல் யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



