Show all

திணிக்க நினைச்சா குமட்டும்! கமல் அவருக்கே உரிய பாணியில், பாஜக அரசின் ஹிந்தித் திணிப்புக்கு சொன்ன விளக்கம்.

அமித்சாவின் ஹிந்தி திணிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது கீச்சுப் பதிவில், திணிக்க நினைச்சா குமட்டும்! என்று கிண்டலடித்துள்ளார்.

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமித்சாவின் ஹிந்தி திணிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கீச்சுவில் பதிவிட்டிருப்பதாவது:

இந்தியா இன்னும் விடுதலை பெற்ற நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது. வெற்று நாயகத்திற்காக அல்ல மக்கள்நாயகத்திற்காக. ஹிந்தி தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு தமிழ் மொழி தான் ஹிந்தி, சமஸ்கிருதம் விட கெத்துன்னு இங்கிலிஷில் பேச எங்க ஆண்டவரால் மட்டுமே சாத்தியம்.

பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விசயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பதுதான்.

விடுதலை பெற்ற மூன்றாவது ஆண்டில் இந்தியா குடியரசான போது அதே சத்தியத்தை மக்களுக்கு அரசு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. சல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.

வங்காளிகளைத் தவிர, மற்றவர்கள் தங்கள் நாட்டுப்பண்ணை அவர்கள் மொழிகள் பாடுவதில்லை. இருப்பினும் அதை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,277.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.