தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம், இதுவும் கடந்து போகும் என தொழில் துறையினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் இந்திய அமைச்சர் நிதின் கட்கரி. அடுப்பை அணைத்துவிட்டு புகையையும் ஊதிவிட்ட கதையாக இருக்கிறதே என்கின்றனர் சமூகச்சான்றோர்கள். 30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம், இதுவும் கடந்து போகும் என தொழில் துறையினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் இந்திய அமைச்சர் நிதின் கட்கரி. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடந்த 65ஆவது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அங்கு உரையாற்றினார். துவண்டு போயுள்ள ஊர்திகள் உற்பத்தித் துறைக்கு இது கடினமான காலம் தான் என்று குறிப்பிட்ட நிதின் கட்கரி, சர்வதேச பொருளாதார நிலைமை காரணமாக, தேவை மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சர்வதேச அளவில் வர்த்தகத்தில் பிரச்சனை நிலவி வருவதாகவும், இதனால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியவர், இதனால் யாரும் அதிருப்தி அடைய வேண்டாம் எனவும் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் வாழ்க்கையில் சில முறை வெற்றியும், சில முறை தோல்வியும் கிடைப்பது வழக்கமான ஒன்று தான், இதற்காக யாரும் துவண்டு போகக் கூடாது என்று கூறியவர், எல்லாம் கடந்து போகும் என்றும் நம்பிக்கையை யாரும் இழக்க வேண்டாம் எனவும் ஆறுதல் கூறியுள்ளார். இந்த நிலையில்- அடுப்பை அணைத்துவிட்டு புகையையும் ஊதி விட்ட கதையாக, என்னும் ஒரு தமிழ் சொலவடை உண்டே, அந்தக் கதை போல யாருக்கு வேண்டும் உங்கள் இதுவும் கடந்து போகும் என்கிற ஆறுதல் என்பதுதான் சமூகச்சான்றோர்களின் பாஜக அரசின் மீதான கேள்வி. தேவை உணவும், மருந்துமே; ஆறுதல் அல்ல! அடுத்த கிழமை கோவாவில் நடக்கவிருக்கும் சரக்கு-சேவைவரி குறித்தான கூட்டத்தில், ஊர்திஉற்பத்தித் துறைக்கு சரக்கு-சேவைவரியில் சலுகை இருந்தால் சரிதான் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,277.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



