நேற்று முதல் தொடங்கிய ஊரடங்குத் தளர்வில் உருபடியாகச் செய்வதற்கு நடுவண் அரசுக்கு ஆயிரம் கடமைகள் இருக்கிற நிலையில், கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை- என்கிற சொலவடையைச் செயலாக்கும் விதமாக நடுவண் பாஜக அரசு, நேற்றே திறந்தது சுங்கச்சாவடியை; மக்களை மேலும் சாவடிக்க கட்டண உயர்வோடு. 08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கை பெரும் விலை கொடுத்து மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். நடுவண் அரசோ அதிகாரப்பாடாக ஊரடங்கை அறிவித்ததோடு சரி. நடுவண் பாஜக அரசின் மீதான மக்கள் வெறுப்புகள் கருத்துப் படங்களாக அன்றாடம் இணையத்தை நிறைத்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றிலிருந்து கொரோனாஆட்சிமை குறைந்த பகுதிகளில் ஊரடங்குத் தளர்வை அறிவித்தது கொஞ்சமாக ஒரு நிம்மதி பெருமூச்சு விடுகின்ற ஒரு வாய்ப்பு என்று பார்த்தால்- இந்தத் தளர்வில் உருபடியாகச் செய்வதற்கு நடுவண் அரசுக்கு ஆயிரம் கடமைகள் இருக்கிற நிலையில்- கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை- என்கிற சொலவடையைச் செயலாக்கும் விதமாக நடுவண் பாஜக அரசு, நேற்றே திறந்தது சுங்கச்சாவடியை மக்களை மேலும் சாவடிக்க கட்டண உயர்வோடு. ஊரடங்கு காலம் முடிவடையும் மே3 வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று எதிர்பார்த்திருந்த லாரி உரிமையாளர்களுக்கு நடுவண் அரசின் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டாயத்தேவைப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் இயங்கி வரும் வேளையில் மீண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையது அல்ல என்று நடுவண் அரசின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது விலைவாசி உயர்வுக்கு வித்திடும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், வணிகர்களும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்தால் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்தார். எனினும் இந்த எதிர்ப்புகளுக்கு நடுவண் பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. சுங்கச்சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஊழியர்கள் பணியாற்றினர். சுங்கச்சாவடிகளை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு குரலுக்கு நடுவே சுங்கச்சாவடிகளை மீண்டும் இயக்கியது மட்டுமின்றி ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போன்று சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘சுங்கச்சாவடிகளில் ஆண்டுந்தோறும் ஏப்ரல் மாதம் முதல் நாளிலேயே புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதன்படி தான் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது’ என்றார். இந்தக் கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று நடுவண் பாஜக அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். வரலாற்றில் ஓர் அரசின் மோசமான நடவடிக்கைகளாக எது இருக்கக் கூடாது என்று ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும் என்கிற ஒரு நிலையில், ஆய்வாளர்கள் பெரிதாகவெல்லாம் மெனக்கெட வேண்டாம். நடுவண் பாஜக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் அப்படியே எடுத்து எழுதிக் கொள்ளலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



