இந்தியக் காவல்பணித்துறை தேர்வில் வென்று கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவராம் இந்த அண்ணாமலை. திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை இரத்து செய்வதாக ஸ்டாலின் கூறுவது, அறங்கூற்று மன்ற அவமதிப்பு என்று பேசி வருகிறார். 29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: யார் இந்த அண்ணாமலை? இந்தியக் காவல்பணித்துறை தேர்வில் வென்று கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவராம். திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை இரத்து செய்வதாக ஸ்டாலின் கூறுவது, அறங்கூற்று மன்ற அவமதிப்பு என்று பேசி வருகிறார் இவர். சட்டமல்லாத செய்திகளை முன்னிறுத்தி சட்ட மிரட்டலை முன்னெடுப்பதும், தேசியத்திற்கு எதிரான நடவடிக்கைகளையே கொள்கையாகக் கட்டமைத்துக் கொண்டு தங்களுக்கு எதிரானவர்கள் மீது தேசத்துரோக மிரட்டலை முன்னெடுப்பதும் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் வேதாந்தமாக இருந்து வருகிறது. இந்தியக் காவல் பணித்துறை பதவியை விட்டு விலகியுள்ள அண்ணாமலை டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் இந்திய ஒன்றியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த உடனேயே அதன் வேதந்த அரசியலை திமுக தலைவர் ஸ்டாலினடமே தன் முதல் போணியைத் தொடங்கியிருக்கிறார். இந்தியாவில் மாநிலஅரசின் கொள்கை முடிவுகளை சட்டமாக்குவதற்கு சட்டமன்றமும், இந்திய ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளை சட்டமாக்குவதற்கு பாராளுமன்றமும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு அனைத்து அரசு நிருவாக அமைப்புகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அப்படி நடைமுறைப்படுத்துவதில் சட்டச்சிக்கல் ஏதாவது இருந்தால் தெளிவு படுத்துவதற்கானவைகள்தாம் அறங்கூற்று மன்றங்கள். நீதிமன்றங்கள் என்று சொல்லப்படுகிற அறங்கூற்று மன்றங்கள் சட்டத்தை உருவாக்கும் அமைப்பு அன்று. அறங்கூற்று மன்ற நடுவர்- தான் அணியும் அங்கியை வேறு வண்ணத்தில் அணியக்கூட அவர் சட்டத்தை உருவாக்க முடியாது. மாற்றுவேன் என்றுகூட சொல்ல முடியாது. ஆனால் ஸ்டாலின்- திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக அறங்கூற்றுவர்கள் அணியும் அங்கியை இன்ன காரணத்திற்காக இன்ன நிறத்தில் மாற்றப் போகிறேன் என்று பேசி மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும். சீமான் கூட சொல்ல முடியும். சீமான்- தமிழகத்திற்கு பல தலைநகரங்கள் அமைப்போம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்கிறார். அங்கீகாரம் பெற்ற எந்தக் கட்சியும் சட்டமாற்றத்திற்கான எந்தக் கொள்கையையும் பேசமுடியும். திமுக ஆண்ட கட்சி, நாளை ஆளப்போகிற கட்சி. அதற்கு நீட்டை அப்புறப்படுத்துவதற்கு கூட முடியாது என்றால், இந்திய ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சர்வாதிகார ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது. வேண்டாம் அண்ணாமலை! தமிழ்நாட்டில் வேண்டாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



