Show all

நீட் தேர்வு எதிர்ப்பு!

29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு தொடங்கியது முதல் தேர்வு எழுத வரும் மாணவர்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மாணவிகளின் ஆடைகளை சோதனை செய்வது முதல், மாணவர்களின் சட்டைகளை கிழித்து அனுப்புவது வரை பல்வேறு அதிர்ச்சிகரமான முன்னெடுப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. தேர்வு எழுத வரும் மாணவர்களை தேர்வறைக்குள் அனுமதிக்கும் முன்பே, அவர்களை மனதளவில் சோர்வடைய வைத்து விடுகிறது இந்தச் சோதனைகள். இத்தனை கடும் கட்டுப்பாடுகள் எதற்கு என்பது புரியாத புதிராகவே உள்ளது. தேர்வு என்றால் பயம் கொள்ள வேண்டாம் என்று சொல்ல வேண்டிய ஒன்றிய, மாநில அரசுகள் மாணவர்களை தேர்வு நாளை நினைத்து கவலைப்பட வைக்கும் சூழல் இப்போது இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் பலமாக எழுந்து வருகிறது. நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் கனவுகளை சுக்குநூறாக்குவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். நீட் தேர்வு இன்றைய சூழலில் தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரே மாதிரியான கல்வி முறை இல்லாத நிலையில், நுழைவுத் தேர்வுகள் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் கல்;வியாளர்கள் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்.

நேற்று அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களை படிக்க வைக்கும் நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். உடனே அந்த அறிக்கை தீயனது. 

அந்த அறிக்கையில்:  நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுத போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போல அவலம் வேறு இல்லை. கரோனா அச்சம் போன்ற உயிர்பயம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்களது நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்த துணை நிற்பதுபோலவே மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்தவேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது கட்டாயம்

ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீன கால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் 6ம் வகுப்பு குழந்தை கூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். எல்லாம் கடந்து படித்து முன்னேறுபவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.

ஒரே நாளில் நீட் தேர்வு 3 மாணவர்களை கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. எளிய குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு ஆதரவாக பலர் கீச்சு பதிவிட்டு வருகின்றனர் #TNStandWithSuriya  என்ற முகப்பின் கீழ் ஆதரவு கீச்சுக்கள் இந்திய அளவில் தலைப்பாகி வருகிறது.  

பிரித்தானிய ஆட்சி காலத்தில் காந்தியாரின் உண்ணாவிரதத்திற்கே ஆட்சியர்களால் மதிப்பளிக்கப் பட்டதால், இந்தியாவே விடுதலை பெற முடிந்தது. இந்த மனுநீதி ஆட்சியாளர்களின் நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அனிதா தொடங்கி ஆதித்தியா வரை தங்கள் உயிரை பலிகொடுத்தும் மனமிறங்கா கல்நெஞ்சு கொண்டேர்களிடம் நீட் என்கிற தேர்விலிருந்தே விடுபட முடியவில்லையே என்று நெஞ்சை உருக்கும் பதிவுகள் #TNStandWithSuriya  என்ற முகப்பின் கீழ்  ஏராளமாய் கீச்சுவில் பதியப்பட்டு வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.