உலக நலங்கு நிறுவனம், உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வரும் சில கடமைகளை நிறைவேற்றுவதே, கொரோனாவிலிருந்து இந்தியா முழுமையாக விடுதலை பெறுவதற்கான வழியாகும். நாமும் வலியுறுத்துவோம். 15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல் தடுப்புக்கு தமிழக அரசு:- உலகில் திறமையாக கொரோனாவை எதிர்கொள்ளும் தென்கொரியா, ஜெர்மனிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த இந்தியாவும், கொரோனாவிற்கு எதிரான நிருவாகத்தை தமிழகம் அளவிற்கு முன்னெடுக்குமானால், உலகில் தென்கொரியா, ஜெர்மனியைத் தாண்டி இந்தியா பாராட்டப் பட்டிருக்கும். இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து தமிழர்கள் நடுவண் நிருவாகங்கள் மற்றும் ஆட்சிக்கு முனையாமை காரணம் பற்றி, இந்தச் சாபக்கேடு இந்தியாவில் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இந்தியா கொரோனாவிற்கு எதிராகத் தென் கொரியாபோல் திறமையாகச் செயல்பட வேண்டும் என்றால், இந்தியா முழுவதும் 16,000 பரிசோதனைக்கூடங்கள் தேவை. எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகளை முறைப்படுத்த வேண்டும். இந்தியாவில் கொரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவில் 16 நிறுவனங்கள் இவற்றைத் தயாரித்து வைத்திருப்பதாகச் சொல்கின்றன. புனே நுண்ணுயிரியியல் நிறுவனம் இவற்றின் தரத்தை உடனடியாக ஆய்வுசெய்து அனுமதி தர வேண்டிய கடப்பாடு தொக்கி நிற்கிறது. கொரோனா சிகிச்சைக்காக சிறப்;புச்சிகிச்சையில் படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளிடம் பேசி, அவற்றையும் களத்தில் இறக்க வேண்டும். மருத்துவமனையில் நோய்த்தொற்று ஏற்படுவதையும் தடுக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கும் இதர சிகிச்சைகளுக்கும் உபகரணங்கள் முதல் பணியாளர்கள் வரை தனித்தனியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கொரோனாவிற்கு என்று சிறப்பான மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையிலும், குளோரோகுயின், அசித்ரோமைசின், லோபினாவிர், ரிடோனாவிர் ஆகிய மருந்துகளால் மிகப்பெரும்பான்மையோர் குணப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உலக அளவில் குளோரோகுயின், அசித்ரோமைசின், லோபினாவிர், ரிடோனாவிர் ஆகிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது. பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை தர, எல்லா மருத்துவமனைகளிலும் இந்த மருந்துகள் கைவசம் இருக்க இந்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும். கொரோனாவிற்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க முனைவோர்களுக்கு சிறப்பான ஊக்கம் அளிக்கவேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அரசின் இந்தக் கடமைகளே கொரோனாவிலிருந்து இந்தியா முழுமையாக விடுதலை பெறுவதற்கான வழியாகும். இதையே உலக நலங்கு நிறுவனமும் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகின்றன. அரசு முன்னெடுக்கும் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பது, கட்டாயம் கட்டாயம் கட்டாயம். கொரோனாவின் சமூகப் பரவலைத் தடுப்பதற்கு உதவும், இந்த ஊரடங்கு நடவடிக்கைகள் கொரோனா ஒழிப்பில் பகுதியாக மட்டும் பயன்தரத் தக்கவையாகும் என்பதை உலக நலங்கு அமைப்பு உலக நாடுகளுக்கு அறிவுறுத்துகிறது. இந்தியாவிற்கு இவைகளையெல்லாம் வலியுறுத்துவது ஊடகங்களின் கடமையாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



