பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைவதாக தெலங்கானா அமைச்சரவை அறிவித்துள்ளது. பாராட்டுவோம் தெலங்கானா அமைச்சரவையை. 26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவல் தீவிரமாகியுள்ள சூழலில் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைவதாக தெலங்கானா அமைச்சரவை அறிவித்துள்ளது. மேலும், இதுவரை நடந்த காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களைக் கணக்கிட்டு பள்ளி தேர்வுகளின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தகுதிப்பாடு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாட்டில் மாநில அரசுகள் குழப்பமடைந்துள்ள நிலையில், தெலங்கானா மாநிலம் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்னும் நிலைப்பாட்டில் அரசு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை சுட்டிக்காட்டி, இரண்டு மாதங்கள் கழித்து தேர்வை நடத்த வேண்டும் எனக்கோரி ஆசிரியர்கள் சங்கம் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வினை தள்ளி வைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி வழக்கு வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது அறங்கூற்றுமன்றம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.