Show all

கொரோனா அச்சத்தோடு, பத்தாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தியே ஆகவேண்டுமா! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்குத் தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் அனைத்தும் திறக்கப்படவில்லை. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்திற்கான பொதுத்தேர்வு நாளது 31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5122 (15.07.2020) முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் ஊரடங்கு முடியாத நிலையில், பொதுப் போக்குவரத்து தொடங்காத நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 12ம் வகுப்பின் எஞ்சிய ஒரு நாள் தேர்வு ஆகியவைகளுக்கான நாளை, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதற்குப் பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் மனநலன், உடல் நலன் குறித்த புரிதல் இன்றி தன்னிச்சையாக இப்படி அறிவிப்பதா என்ற விமர்சனம் எழுந்தது.

தேர்வு அட்டவணையைத் திரும்பப் பெற வேண்டும், ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தபின் தேர்வு நடத்த வேண்டும், ஊரடங்கு விலக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு அதன் பின்னர் 15 வகுப்பு நாட்கள் அந்த மாணவர்கள் வருவதை அனுமதித்துவிட்டு அதன் பின்னர்தான் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வை நடத்தியே தீருவது என அரசு மும்முரமாக இருக்கும் நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதை எதிர்த்து உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் இராமதாஸ், உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்வை ஒத்தி வைக்கவேண்டும், மாணவர்கள் உயிரோடு விளையாட வேண்டாம் எனக் கடுமையாக எச்சரித்து அறிக்கையும் விட்டுள்ளனர்.

உயர் அறங்கூற்றுமன்றம், ‘மாணவர்கள் தலை மீது கத்தி தொங்குவதை வேடிக்கை பார்க்க முடியாது. 01,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5122 (15.06.2020) முதல் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது, அடுத்த மாதம் நடத்தலாமா  என பதில் சொல்லுங்கள் என்று தமிழக அரசை எச்சரித்துள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் துறை சார்ந்த செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து அவர் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வைத் தள்ளிவைக்கும் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து விட்டு போக வேண்டியதுதானே? என்பதுதான் மாணவர்கள் பெற்றோர் குறிப்பாக சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கொரோனா பாதிப்பால் ஒரு வரலாற்றுத் திரும்பம்தான் நடந்து விட்டு போகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பத்தாம் வகுப்பு என்பது- கல்விவாழ்க்கையில் ஒரு மைல்கல் மாதிரி இருந்து கொண்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி இழந்தவர்களில் 99 விழுக்காட்டினர் மேற்கொண்டு படிப்பதற்கு முழுக்குப் போட்டுவிடுவதே நடைமுறையாக இருந்து வருகிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால் தேர்ச்சி இழந்தவர்களில் 80 விழுக்காட்டினர் வீணாய்ப்போன ஆங்கில பாடத்தில்தான் தேர்ச்சியிழந்திருப்பார்கள். ஆங்கிலப்பாடத்தில் கூட, தேர்ச்சி இழந்தவர்களுக்கும் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இடையே இருக்கிற வேறுபாடு:- எட்டு சம்மரி, எட்டு போயம்ங்களை, புரியாமல் வெற்றோசைகளாக மனப்பாடம் செய்யும் ஆற்றல் உள்ளமை- இல்லாமை குறித்ததாகவேயிருக்கும். 

எத்தனையோ நாடுகளில், ஆறுமாதங்களில் எந்த அயல்மொழிகளையும் கற்றுக் கொடுத்துவிடுகிற கல்விமுறையை வைத்திருக்கிற நிலையில், நம்முடைய தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளும் கட்டாயப்பாடமாக ஆங்கிலம், அதுவும் மழலையர் வகுப்புகளில் இருந்தே ஆங்கிலம், பாட மொழியாக மற்றும் இல்லாமல், பயிற்று மொழியாகவும் ஆங்கிலம். ஆனால் ஒருவருக்கு கூட ஒரு சிறிய செய்தியைக் கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிடக் கூடிய புலமை இல்லாத கல்விமுறை. இந்தக் கல்விமுறையில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சியின்மை அறிவிக்கப்பட்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை அறிவித்து பலரின் வாழ்க்கை திசை மாற்றப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களும் மதிப்பெண் குறைவு காரணமாக, அவர்கள் விரும்பிய கல்வியைப் பெற முடியாதவர்களாக படிப்புக்கு முழுக்குப் போடுகிறவர்கள் குறைந்தது 30 விழுக்காடாகவாவது அமைந்து விடுவார்கள்.

நடப்பில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கெல்லாம், கெரோனாவின் பெயரால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அங்கீகாரமும், மேற்கொண்டு படிப்பைத் தொடரும் வாய்ப்புதாம் இந்த ஒருமுறையாவது கிடைத்துவிட்டுதாம் போகட்டுமே. புதிய வரலாறு உருவாக இந்த அரசு முனையலாமே என்பது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.