கொரோனா பரவல் தடுக்கும் முகமாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்றதொடரில் பங்கேற்க வேண்டாம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. 10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வருவதால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பாராளுமன்றகூட்டத்தில் பங்கேற்காமல் தொகுதிகளுக்கு திரும்புமாறு திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சித்தலைமை அறிவுறுத்தி உள்ளது. மேலும் பாராளுமன்றகூட்டத்தொடரையும் இன்றுடன் (திங்கட்கிழமை) முடித்து விடுமாறு நடுவண் அரசுக்கும் அந்தக் கட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது. இதன்பொருட்டு இரு அவைகளின் தலைவர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டெரிக் ஓபிரையன் மடல் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்குமாறும், 65 அகவைக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் தலைமைஅமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். மாநிலங்களவையில் 44 விழுக்காடும், மக்களவையில் 22 விழுக்காடும் 65 அகவைக்கு மேற்பட்டவர்களே உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாராளுமன்றவளாகத்துக்கு வருகின்றனர். இது மிகப்பெரும் ஆபத்தாகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



