கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 அகவை பெண்ணுக்கும், துபாயில் இருந்து தமிழகம் வந்த 43 அகவை மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி இருக்கிறது. இவர்களோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. 10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி எழுவர் கொரோனா பாதிப்பு சிகிச்சை வளையத்தில் வந்த நிலையில் இன்று மேலும் இருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பதை, தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த இருவரும் தமிழ்ச்சமூக பரவல் சாராத, கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 அகவை பெண்ணுக்கும், துபாயில் இருந்து தமிழகம் வந்த 43 அகவை மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி இருக்கிறது. இவர்களோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கலிபோர்னியாவில் இருந்து வந்த பெண் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், துபாயில் இருந்து வந்தவர் நெல்லை மருத்துவக்கல்லூரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நலங்குத்த்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்று வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் நடுவண் அரசு தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களை தனிமைப்படுத்தி இருக்கிறது. கட்டாயத்தேவைப் பணிகளான மருந்து, மாத்திரைகள், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை தவிர மற்ற போக்குவரத்து இந்த மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு மாத இறுதிநாள் வரை இன்னும் 18நாட்களுக்கு நடக்காது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 9 பேரில் டெல்லியில் இருந்து வந்த ஒருவருடன் தொடர்பில் இருந்த 193 பேரை கண்காணித்து வருகிறோம். கலிபோர்னியா மற்றும் துபாயில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த 2 பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் 2 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது. இதுவரை 443 பேருக்கு ரத்த பரிசோதனை செய்து இருக்கிறோம். இதில் 352 பேருக்கு நோய் தாக்கம் இல்லை. 9 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் குணமடைந்துவிட்டார். 82 பேருடைய ரத்த பரிசோதனை முடிவு வர வேண்டி இருக்கிறது. முககவசம் விலையை ரூ.8, ரூ.10 என்று நடுவண் அரசு விலை நிர்ணயம் செய்து இருக்கிறது. தொற்றுதடை (சேனிடைசர்) அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தொற்றுதடை மற்றும் முககவசத்தை அதிக விலைக்கு விற்ற 40 மருந்து கடைகளுக்கு முத்திரை வைக்கப்பட்டு இருக்கிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உத்தரவாக பார்க்காமல், மக்கள் தாமாக ஒத்துழைப்பு வழங்குவதே வேண்டப்படுவதாகும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொற்றுதடை மூலம் கை கழுவக்கூடிய முறை தொடர்பாக விழிப்புணர்வு செய்யபட்டுள்ளது. இதை இப்போதைக்கு மட்டுமின்றி தொடர்ந்து செய்யவேண்டும். இவ்வாறு தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



