Show all

போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது! வடஇந்திய உழவர்களும் கிள்ளுக்கீரைதான் ஒன்றிய பாஜக அரசுக்கு

டெல்லியில், குறைந்த எண்ணிக்கையில், தமிழக உழவர்கள் நடத்திய போராட்டத்திற்கு என்ன மாதிரியான புறக்கணிப்பு நிகழ்ந்ததோ- அதுவேதான், பேரளவாக வடஇந்திய உழவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் என்கிற நிலையில் அண்மையில் குடிஅரசு நாள் கொண்டாடிய நாடுதானா இது என்று வியக்கத் தோன்றுகிறது.

22,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சரியாக 100 நாட்களுக்கு முன், நாளது 11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122 (26.11.2020) அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உழவர்கள் டெல்லியின் எல்லைப் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டத்தைத் தொடங்கினர்.

இன்று வரை போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, இந்த 100 நாட்களில் பல வகையான போரட்டங்களை உழவர்கள் முன்னெடுத்தனர்.

குடியரசு நாளன்று நடந்த டிராக்டர் பேரணியில் குழப்பங்கள் விளைவித்து காவல்துறை தாக்குதலும் நடந்தன. ஆனாலும் உழவர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

100 நாட்கள் போராட்டம் தொடர்பாக, சம்யுக்த கிசான் மோர்ச்சா என்கிற உழவர்கள் அமைப்பு, இன்று  ஐந்து மணி நேரம் கே.எம்.பி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறார்கள்.

அதோடு இந்த நாளை ஒரு கருப்பு நாளாக அனுசரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொது மக்களும் உழவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் தங்கள் வீட்டில் கருப்புக் கொடி போன்றவைகளை வைக்குமாறு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.