Show all

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி உறுதி செய்யப்பட்டுள்ளது.

21,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ஒரு பக்கம் கருத்துப் பரப்புதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், மறுபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடல் தீவிரமடைந்து வருகிறது. 

அந்த வகையில் கடந்த ஒரு கிழமையாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக திமுக தரப்பில், அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பிலும் அதிகாரப்பாடாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொகுதிப்பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. 

மொத்த 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 17 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, மனித நேய மக்கள் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.