ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தலைப்பை ஆளும் பாஜக முன்னெடுத்திருக்கிற நிலையில், அந்தத் திட்டம் சாத்தியமானால் காஷ்மீரில் குடிஅரசுத் தலைவர் ஆட்சியை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுந்தானே? வெறுமனே ஆறு மாதம் நீட்டிக்கும் மசோதாவுக்கே எதிர்கட்சிகள் எகிறி என்னத்தை சாதித்து விட முடியும்? ஆளும் பாஜக மோடி அரசு மிகத் தெளிவாகவே இருக்கிறது. 13,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்னெடுக்கும் முன் முயற்சியாக காஷ்மீரில் குடிஅரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அமித்சாவால் பதிகை செய்யப்பட்டது. காஷ்மீரில் குடிஅரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதம் நீட்டிக்க செய்வதற்கான மசோதாவை பதிகை செய்து, அமித்சா கூறுகையில், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது. அங்கு பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநிறுத்த விரும்புகிறோம். ஆறு மாதங்களுக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும். தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையமும் ஒப்பு கொண்டுள்ளது. தற்போது, மாநிலத்தில் பயங்கரவாத செயல்கள் குறைந்துள்ளன. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை நடுவண் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எல்லையில், குறிப்பிட்ட காலத்திற்குள் பதுங்கு குழிகள் அமைக்கப்படும். அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று துணைக் காரணங்களை அடுக்கினார் அமித்சா. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இடதுசாரி கட்சியைச் சேர்ந்த கொல்லம் பிரேமச்சந்திரன், நாடாளுமன்றத் தேர்தலை ஜம்மு காஷ்மீரில் அமைதியாக நடத்த முடிந்தது இல்லையா? அப்படியானால் ஏன் சட்டமன்றத் தேர்தலை அங்கு அமைதியாக நடத்த முடியாது? என இளம்மழலை வகுப்பு குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் எளிமையான ஒரு கேள்வியை முன்வைத்தார். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்னெடுக்கும் முன் முயற்சியாகவே காஷ்மீரில் குடிஅரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு செய்வதற்கான மசோதா என்கிற பாஜகவின் யுக்தியை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆளும் பாஜக மோடி அரசு என்னவோ மிகத் தெளிவாகத்தான் இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,197.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.