Show all

நீட் தேர்வை இரத்து செய்வதால் ஒரேயொரு சிக்கல்தான்! பல தமிழக ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு கிடைத்து விடும்

இவ்வளவு கடுமையான கொரோனா நெருக்கடிகளுக்கு இடையில் நீட். ஜேஇஇ நடத்தி மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல்  உருவாக்குவதை விட, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு உழைப்பில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் உருவாக்கி விடலாம்.

12,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இவ்வளவு கடுமையான கொரோனா மற்றும் வெள்ளச் சேத நெருக்கடிகளுக்கு இடையில் நீட். ஜேஇஇ தேர்வுகள் நடத்தி மருத்துவப் படிப்பு மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் உருவாக்குவதை விட, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு உழைப்பில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்குத் தரவரிசை பட்டியல் உருவாக்கி விடலாம் என்பது உறுதியான உண்மை. அந்த எளிமையான நடைமுறைதான் இன்றும் தமிழகப் பொறியியல் கல்லூரிகளுக்குப் பின்பற்றப் படுகின்றன.

கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள்: 134714 பேர்கள். அவர்களில் நீட் தேர்வில் தேறியவர்கள் 2500 பேர்கள் மட்டுந்தாம். அதில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் வெறுமனே பத்து பேர்கள்.

இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை: 1,17,200 ஆகும். அவர்கள் நடுவண் அரசில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு, நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்றும்- நடந்தாலும் நம்மால் அந்த 2500 பேர்களில் ஒருவராக வெற்றி பெற முடியுமா என்றும்- மனஉளைச்சலில் கிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிற நிலையில்- 

தமிழக அரசில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,31,436 மாணவர்களுக்கும் ரேண்டம் எண் எனப்படும் தரவரிசை எண் அல்லது சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்டு விட்டது. இத்தனை பேருக்கும் பொறியியல் கல்வி உறுதியாக உண்டு. கல்லூரிகள், கட்டணங்கள் மாறுபடும்.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு மூலம் மாநிலத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பி.டெக்., பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவு நடைமுறைகள் நடந்தன. இதன் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர்.

சான்றிதழ்களை ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு செய்திருந்தது. இதன்படி 1,11,436 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்தனர்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு மீண்டும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதையடுத்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதன்படி, விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருக்கும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவர்களுக்கும் இன்று சம வாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு இல்லையென்று தமிழக மருத்துவக் கல்லூpகள் மீதான முற்றுகையை நடுவண் அரசு தளர்த்திக் கொள்ளுமேயானால் ஒரே கிழமையில், பொறியியல் கல்லூரிகளுக்குப் போல மருத்துவக் கல்லூரிக்கும் தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறை விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை எளிதாக உருவாக்கி விடும். 

தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வை நடத்துவதுதான் சிக்கலேயன்றி, நடத்தாமல் விடுவதில் ஆதயங்களைத் தவிர சிக்கல் எதுவுமே இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.