நடுவண் அரசு, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிப்பவர்களுக்கு மின் அனுமதி முறையை நீக்கியுள்ள போதும், தமிழகத்தில் மின் அனுமதி பெறும் முறை நீக்கப்படவில்லை; ஆனால் தளர்த்தப்பட்டுள்ளது. மின் அனுமதியை நீக்க முடியாமைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரும் விளக்கம் ஏற்புடையதாகவே உள்ளது. 11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் மின்அனுமதி வழங்கும் நடைமுறையை நீக்காமல் தொடர்வது ஏன்? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசால் முழு மூச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, தனிக்கவனம் செலுத்தப்பட்டு, இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை குணமடையச் செய்யும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் செய்யப்படுவதன் காரணமாக கொரோனா நுண்நச்சு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்நோய் தொற்றுக்கு மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கும் காரணத்தாலும், இந்தியாவில், அதிக பரிசோதனைகள் செய்கின்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாலும், இந்நோய்த் தொற்று பரவல் குறைக்கப்பட்டு நாட்டிலேயே, தமிழ்நாட்டில்தான் குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. மின் அனுமதி நடைமுறை எளிமையாக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய் பரவலை தடுக்க அரசு சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசித்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மின் அனுமதி கொடுத்தால் தான், தொற்று பரவல் ஏற்படும் சூழலில் அவர்களது தொடர்பை கண்டுபிடிக்க முடியும். இல்லையெனில் கண்டுபிடிக்க முடியாது. அதற்காகத்தான் இந்த நடைமுறை. கேட்கிற அனைவருக்கும் மின் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பொறுப்புணர்வோடு கட்டாயத்தேவைப் பணிக்காக மட்டுமே பயணிக்க வேண்டும். ஏனென்றால், இது உயிர் தொடர்பான சிக்கல். கொரோனா கொடிய நோய் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. மக்களை பாதுகாக்க வேண்டும் என்றுதான் இந்த கட்டுப்பாடு உள்ளது என்று தெரிவித்தார் தமிழக முதல்வர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



