Show all

தாய்மொழி முனைப்பில் கருநாடகம்! இந்தியாவின் அலுவல் மொழிகள் 22ல் ஒன்றுதான் ஹிந்தி. தொடர்வண்டித் துறையில் ஹிந்தியை முற்றாக அகற்றுக

ஹிந்தியை நீக்குக. தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் வகைக்கு என்றால் 22 மொழிகளையும் சேருங்கள் என்று பெங்களூர் மெட்ரோவுக்கு அதிரடி ஆணையிட்டுள்ளது கருநாடக அரசு. 

13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: எல்லா இடங்களிலும் இருக்கிற ஹிந்தியை மொத்தமாக நீக்க வேண்டும் என்று பெங்களூரு மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகத்திற்கு ஒரு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, இந்தியாவின் அலுவல் மொழிகள் 22ல் ஒன்றுதான் ஹிந்தி. நடுவண் அரசு ஹிந்தியை மட்டும் தூக்கிப்பிடிப்பது ஒரு மொழிக்கு சொந்தக்காரர்களின் ஆதிக்கப் போக்கு ஆகும். ஒன்று ஹிந்தியை நீக்கவேண்டும் இல்லையென்றால், 22 மொழிகளையும் அதுகூட சேர்த்து எழுத வேண்டும். என்று கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் இந்த உத்தரவில் அதிரடியாக தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில், தாய்மொழியான கன்னடத்தை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.. அதில் ஒன்றுதான் கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் என்பது. யாரெல்லாம் கன்னட மொழி பேசாத ஊழியர்கள் இருக்கிறீர்களோ, அவர்கள் 6 மாசத்துக்குள் கன்னட மொழியை கற்க வேண்டும், இல்லாவிட்டால் பணிநீக்கம் மட்டுமே, என்று வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது. பெங்களூரு மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகத்திடம் பெங்களூரு மெட்ரோவில் கன்னடம் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், கன்னட மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் பெங்களூரு மெட்ரோ தொடர்வண்டி நிர்வாக அதிகாரிகளிடம் காணொளி கலந்துரையாடல் மூலம் பேசியதாவது: “மெட்ரோ தொடர்வண்டி நிலையங்கள். மெட்ரோ தொடர்வண்டிகளில் ஹிந்தி மொழியை பயன்படுத்தியது தொடர்பாக எங்களுக்கு நிறைய புகார்கள் வந்திருக்கின்றன. கடந்த 2017-ல் கன்னட ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி எத்தனையோ, மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களில் இருந்த பெயர்பலகைகளில் ஹிந்தி சொற்களை கருப்பு மை கொண்டு மறைத்தனர். 

இன்னும் பலவகையான பெயர் பலகைகள், அறிவிப்புகள் ஆகியவற்றில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது. எனவே அந்த ஹிந்தி மொழியையும் முழுசா நீக்கிவிட வேண்டும் இல்லை என்றால், 22 மொழிகளையும் சேர்த்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்கள். 

இந்தியாவில் 22 அதிகாரப்பாட்டு அலுவல் மொழிகள் உள்ளன. ஆனால் அவைகளில் ஒன்றான ஹிந்தியை மட்டுமே நடுவண் அரசு உயர்த்திப் பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பற்றி கன்னட மொழி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் டிஎஸ் நாகபரணா சொல்லும்போது, “மெட்ரோ தொடர்வண்டி நிலைய பலகைகளில் ஹிந்தி மொழியை பெங்களூரு மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம் நீக்கிவிட்டது. ஆனால் தொடர்வண்டிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் அறிவிப்புகள், தகவல்கள் இன்னமும் ஹிந்தி மொழியில்தான் இருக்கின்றன. அதாவது கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என 3 மொழிகளில் உள்ளன. இதில் ஹிந்தியை மட்டும் எடுக்க சொல்லி இருக்கிறோம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவிலும் மெட்ரோ தொடர்வண்டி சேவை உள்ளது. அங்கும் ஹிந்தியை நீக்குங்கள். இல்லையென்றால், 22 மொழிகளையும் அதுகூட சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி உள்ளோம். ஹிந்திக்கு இடம் கொடுப்பதாக இருந்தால், நம் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மொழிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். 

இந்த மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சகோதரர்களும் இங்கே வசிக்கிறார்கள். அவர்களின் மொழிக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கலாமே? என்றார். 

கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பை கையில் எடுத்திருப்பதால், இது தொடர்பாக வரும் நவம்பரில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம் சார்பாக பதில் தரப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் கிளம்பியுள்ள இந்த ஹிந்திப் திணிப்பு எதிர்ப்பு முயற்சிக்கு தமிழ்நாடு உறுதியாக ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் நிற்கும். இந்த முயற்சியில் கருநாடகம் உறுதியான வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.