வாக்களிக்க வேண்டிய 15 சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் முடக்கப் பட்ட நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இந்நிலையில் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். 10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படுத்தினர். இதனையடுத்து சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன. இதனால் குமாரசாமி முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகினார். எதிர்நோக்கியவாறே, இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா, பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் எடியூரப்பா, ஆளுநர் வஜூபாய் வாலாவின் வருகைக்காக காத்திருந்தார். 6.30 மணியளவில் ஆளுநர் பதவி ஏற்பு விழா மேடைக்கு வந்தார். நாட்டுப்பண்னுடன் விழா தொடங்கியது. 6.32 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் தெய்வத்தின் பெயரால் உறுதி மொழி அளித்து எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,225.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



