மாநில உரிமைகளை மீட்டெடுப்பதில் நாம் சாதிக்க வேண்டியது ஒற்றைக் கோரிக்கையே:- ஹிந்தி மொழிக்கு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்ட அனைத்துச் சிறப்புத் தகுதி பிரிவுகளையும் நீக்கி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழுங்கு படுத்திட, உரிய கருத்துப் பரப்புதல்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்து வெற்றி பெறுவது மட்டுமே. இன்றைய தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம். 16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரசும் சரி, பாஜகவும் சரி, இரண்டுமே உண்மையில் ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சிகளே. இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் ஹிந்தி பேசும் மக்களின் மாநிலங்களாக இருப்பதால் எளிதாக அவர்கள் ஒன்றிய ஆட்சியை ஹிந்தி பேசும் தலைவர்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முடிகிறது. இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த உடனேயே, ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ்:- இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 இன் கீழ் ஹிந்தியை நடுவண் அரசின் அலுவலக மொழியாக்கியதோடு, பிரித்தானிய ஆட்சியில் அலுவல் மொழியாக இருந்த ஆங்கிலத்தை அப்புறப் படுத்துவதற்கு 15 ஆண்டு காலம் என்று காலக்கெடுவையும் சட்டமாக்கியிருக்கிறது. ஆங்கிலத்தை அப்புறப்படுத்தி ஹிந்தியை நிறுவுவதற்கு ஹிந்திக்கு சிறப்புத் தகுதி வழங்கியிருக்கிறது. இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த உடனேயே, ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் முன்னெடுத்த இன்னொரு சிறப்புத் தகுதி:- ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மாமன்னராக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்குப் பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார். அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டது. அரசியல் சித்தாந்த அடிப்படையில் இந்த இரண்டு சிறப்புத் தகுதிகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட, இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளாகும். இந்திய ஒன்றியம்- ஒரேநாடு, ஒரேமொழி, ஒரேமதம், ஒரேஅடையாளம், ஒரேஆதார், ஒரேதேசம் என்று பாஜகவின் கொள்கைத் திட்டத்திற்கு அடிக்கல்லாக அமைவதுதான் ஹிந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி. ஹிந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புத்தகுதி அடிப்படையில் தான் பாஜக இந்த அளவிற்கு வளர முடிந்திருந்திருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியோ மாநில மொழிகள், மாநில உணர்வுகள், மாநிலக் கலாச்சாரங்கள் என மாநில உரிமைகளுக்கு அடிப்படையானது. சட்டப்பிரிவு 370ஐ மேற்கோளாகக் காட்டி இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களும் மிக மிக எளிமையாகவே தங்களுக்கும் சிறப்புத் தகுதி பெற்றிருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. அது நடக்காமலே மாநிலநாள் கொண்டாடுவது அறிவின்மையின் உச்சமேயாகும். அதே சமயம் மொழிஅடிப்படை மாநிலங்கள் அமைக்கப்பட்ட உடனேயே உடனடியாக செய்திருக்க வேண்டியது அப்புறப்படுத்தியிருக்க வேண்டியது ஹிந்திக்கு வழங்கப்பட்டு வருகிற சிறப்புத் தகுதியே. ஆனால் நடந்தது என்ன? மாநில உரிமைகளுக்கு அடிப்படையான காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியை நீக்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அடுத்து ஒரேநாடு ஒரேமொழி, ஒரேமதம் என்று ஆதிக்கவாதத்தை முன்னெடுத்து வருகிறது. இதுதான்நாம், மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முயலாததும், காங்கிரசும் பாஜகவும் ஒற்றை ஹிந்திமொழி, அந்த மொழி சார்ந்த கலாச்சாரத்தை ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்கள் மீதும் திணித்து அடிமைப்படுத்துவதுமாகும். இந்த நிலையில், இன்றைய நாளில், தமிழ்நாடு நாளில்- நாம் முன்னெடுக்க வேண்டியது:- ஹிந்தி மொழிக்கு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்ட அனைத்துச் சிறப்புத் தகுதி பிரிவுகளையும் நீக்கி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழுங்கு படுத்திட, உரிய கருத்துப் பரப்புதல்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்து வெற்றி பெறுவது மட்டுமே. இன்றைய தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



