ஹிந்தி மொழிக்கு- இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்ட அனைத்துச் சிறப்புத் தகுதி பிரிவுகளையும் நீக்கி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழுங்கு படுத்திட, உரிய கருத்துப் பரப்புதல்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுக்க இன்றைய தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம். 16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான இன்றைய நாள் தமிழ்நாடு நாளாக தமிழகம் முழுவதும் உணர்வு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரித்தானியர் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்துச் சென்ற போது, முதலாவதாக ஆட்சிஅரியணை ஏறிய காங்கிரசின் வட இந்தியத் தலைவர்கள்- இலட்டு மாதிரி கிடைத்த ஒன்றிய இந்தியாவில் ஆங்கிலத்தை அப்புறப்படுத்தி விட்டு ஹிந்தியை அரியணை ஏற்றுவதற்கு ஒரு சட்ட அடிப்படையை உருவாக்கி வைத்து விட்டார்கள். அதன் அடிப்படையில் அவ்வப்போது ஹிந்தித் திணிப்பு முயற்சியை ஆண்ட காங்கிரசார் முன்னெடுத்தனர். ஆளுகின்ற பாஜகவினரும் முன்னெடுத்தே வருகின்றனர். பிரித்தானியர் வழங்கி விட்டுச் சென்ற இந்தியாவில்- சென்னை அரசாட்சி பிரிவு உள்ளிட்ட மூன்றே மாநிலப் பகுதிகளாக மட்டுமே நடைமுறையில் இருந்தன. பின்னர் அம்மாநிலங்களை மொழிஅடிப்படையான மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் சென்னை அரசாட்சி பிரிவு உள்ளிட்ட மூன்றே மாநிலப் பகுதிகளாக மட்டுமே நடைமுறையில் இருந்த மாநிலங்கள் மொழிஅடிப்படையில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சென்னை பகுதிகளும் மொழிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டன. தமிழ் பேசும் பகுதிகள் அனைத்தும் மெட்ராஸ் ஸ்டேட்- சென்னை மாநிலமாக நாளது 16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5058 (1956-ம் ஆண்டு நவம்பர் 1) அன்று தோன்றியது. பின்னர் மெட்ராஸ் ஸ்டேட்- சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றினார் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாடு மாநிலமாக உருவான நாள் 16,ஐப்பசி (நவம்பர் 1) ஆகையால் தமிழ்நாடு நாள் தமிழ் ஆர்வலர்களால் பல ஆண்டுகளாகக் கொண்டாடப் பட்டு வந்தபோதும் கூட- தமிழ்நாடு அரசால் கடந்த ஆண்டு முதலே கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் உணர்வு எழுச்சியுடன் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை தலைமை செயலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின் விளக்குகளால் தலைமை செயலகமான கோட்டை ஒளிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக்கப்பட்டும் வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த தமிழ்நாடு நாள் வாழ்த்து செய்தியில், தமிழ் எனும் உன்னத செல்வத்தை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம். அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்து செய்தியில், மொழி - இன உணர்வும், மாநில உரிமைகளும் பழுதுபடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய நம் அனைவருக்கும் இருக்கிறது. மாநில உரிமைகள் கடுமையான சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மொழிஅடிப்படை மாநிலங்கள் பிரிந்த 16,ஐப்பசி (நவம்பர்1) நாளில், நாம் தமிழ்மொழி - இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்திட உறுதியேற்போம்! மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்! என கூறியிருக்கிறார். எது எப்படி இருந்த போதும்- ஹிந்தி மொழிக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்ட அனைத்துச் சிறப்புத் தகுதி பிரிவுகளையும் நீக்கி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழுங்கு படுத்தினால் அன்றி மொழிஅடிப்படை மாநிலங்களுக்கான அடிப்படையான மொழி மற்றும் கல்வி உரிமைகள் மறுக்கப் பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஹிந்தி மொழிக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்ட அனைத்துச் சிறப்புத் தகுதி பிரிவுகளையும் நீக்கி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழுங்கு படுத்திட உரிய கருத்துப் பரப்புதல்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுக்க இன்றைய தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



